×

புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டுவிற்கு கொடைக்கானலில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கொடைக்கானல்: புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டுவிற்கு கொடைக்கானலில் வர்த்தக மையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, பூம்பாறை ,கூக்கால், பழம்புத்தூர், புது புத்தூர், மன்னவனூர், பூண்டி, போளூர் ,கிளாவரை, கவுஞ்சி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. இதில் மருத்துவ குணம் கொண்ட மலைப்பூண்டு அதிக அளவில் சுமார் 7,000 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. வருடத்தின் சில மாதங்கள் பெய்யும் மழைநீரை இங்குள்ள ஏரிகளில் தேக்கி பொதுமக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் கடந்த 3 வருடங்களாக போதிய அளவு மழை இல்லை. இந்த பாதிப்பில் இருந்து விவசாயிகள் மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளனர். வெள்ளைப்பூண்டு விவசாயம் இப்பகுதி மக்களின் பணப்பயிராக வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வருகிறது. இங்கு விளையும் வெள்ளைப்பூண்டு பெரியகுளம் வடுகபட்டி பூண்டு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள வியாபாரிகளால் வாங்கப்பட்டு பின்னர் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரியகுளம் வடுகப்பட்டி பூண்டு சந்தையில் வியாபாரிகள் வைக்கும் விலையே இறுதியானதாகும்.

இதனால் விவசாயிகளுக்கு பலமுறை எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை. இருந்தபோதும் இங்கு விளையும் மலைப்பூண்டுக்கு மட்டும் எப்போதும் மவுசு குறையாது. இந்நிலையில் கொடைக்கானலில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டுக்கு புவிசார்குறியீடு வழங்கவேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகம் மற்றும் தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை மாநிலமன்றம் சார்பில் 2018-ம் ஆண்டு மருத்துவகுணம் வாய்ந்த கொடைக்கானல் மலைப்பூண்டுவிற்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் ஒன்றிய அரசு கொடைக்கானல் மலைப்பூண்டுவிற்கு புவிசார் குறியீடு வழங்கியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்ப நிலை, மண்ணின் தன்மை, மலையின் உயரம் போன்ற காரணங்களால் இந்த பூண்டுக்கு இதுபோன்ற தனித்தன்மை கிடைத்துள்ளது. தற்போது இந்த பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் போலி பூண்டு வகைகளை தடுத்து கொடைக்கானல் பூண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க முடியும்.

தற்போது ஒரே விற்பனை சந்தையாக திகழ்ந்து வரும் பெரியகுளம், வடுகபட்டி, சந்தையில் தான் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையக்கூடிய மருத்துவ குணமுடைய புவிசார் குறியீடு பெற்ற வெள்ளைப் பூண்டினை விவசாயிகள் விற்று வருகின்றனர். அங்கு உள்ள வியாபாரிகள் ,இடைத்தரகர்கள் தங்களது லாபத்திற்கு ஏற்றவாறு விற்பனையை செய்து வருகின்றனர். பூண்டு விவசாயிகளுக்கு போதிய அளவிலான லாபம் பல நேரங்களில் கிடைப்பதில்லை. இதில் விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இது தவிர கொடைக்கானல் மலைப்பகுதியில் அறுவடை செய்யக் கூடிய பூண்டு அனைத்தும் ஓரளவு பதப்படுத்தப்பட்டு சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவு வரை வாகனத்தில் எடுத்துச் சென்ற பிறகுதான் பெரியகுளம் வடுகபட்டி பூண்டு சந்தையில் சந்தைப்படுத்தும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவும் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டிற்கும் கொடைக்கானல் மலைகிராமங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக விளையும் இடமான கொடைக்கானலில் பூண்டு சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு கொடைக்கானலில் பூண்டு சந்தை அமைப்பதுடன் இந்த மருத்துவ குணமுடைய வெள்ளைப் பூண்டினை இயற்கை முறையில் பதப்படுத்தி பாதுகாப்பதற்கான கிடங்கிணையும் ஏற்படுத்தித்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பதப்படுத்தும் கிடங்கு அமைத்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் போது வெள்ளைப் பூண்டினை பாதுகாத்து வைத்து மற்ற நேரங்களில் நல்ல விலைக்கு விற்க முடியும். வெள்ளை பூண்டிற்கு வர்த்தக மையமும் பதப்படுத்தும் கிடங்கும் ஒரே இடத்தில் அமைத்து தரவேண்டும் என்று அதுவும் கொடைக்கானல் பகுதியில் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். பல ஆண்டுகளாக விவசாயிகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகின்றனர்.விவசாயிகளின் இந்த நியாயமான எதிர்பார்ப்பை தமிழ்நாடு அரசு பூர்த்தி செய்யுமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கொடைக்கானல் மலை பூண்டிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது இருந்தபோதும் இந்த மருத்துவ குணமுள்ள மலைப்பூண்டு விற்பனை செய்யப்படும் இடம் பெரியகுளம் வடுகபட்டி பூண்டு சந்தையில்தான் .கொடைக்கானலில் பூண்டு விற்பனை செய்வதற்கு தனி சந்தை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இது பற்றி மன்னவனூர் விவசாயி விவேகானந்தன் கூறுகையில், ‘‘கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் பிரதான விவசாய விளை பொருளாக இருப்பது வெள்ளைப்பூண்டு தான் .இந்த மலை பூண்டிற்கு புவிசார் குறியீடு கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் எங்களது முக்கியமான விவசாய விளை பொருளாக இருக்கக்கூடிய இந்த மலைப்பூண்டு பெரியகுளம் வடுகப்பட்டி கொண்டு சென்று தான் விற்பனை செய்ய முடியும். அத்துடன் இடைத்தரகர்களின் தொல்லை, கமிஷன் கடைக்காரர்கள் வைத்ததுதான் விலை உள்ளிட்ட காரணத்தினால் எங்கள் போன்ற விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்காமல் மிகுந்த நஷ்ட்டப்பட்டு வருகின்றோம். எனவே மழை பூண்டிற்கு என கொடைக்கானலில் தனி சந்தை அமைக்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

 

 

The post புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டுவிற்கு கொடைக்கானலில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Malaipundu ,Kodaikanal ,Melamalai… ,Dinakaran ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை