சென்னை : 1956ம் ஆண்டு தமிழ் சங்க பொன் விழா நிகழ்வுகள் தொடர்பாக தி இந்து நாளிதழ் அளித்துள்ள விளக்கத்தின் மூலம் அண்ணா பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது உண்மை அல்ல என்பது அம்பலம் ஆகியுள்ளது. கடந்த 11ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, அண்ணாவை விமர்சித்தது அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் அளவிற்கு சென்றது. சென்னை கூட்டத்தில் பேசிய அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 1956ம் ஆண்டு நடந்த தமிழ் சங்க பொன் விழா கூட்டத்தில், அறிஞர் அண்ணாவின் பேச்சை சுட்டிக் காட்டி இருந்தார்.
மணிமேகலை என்ற சிறுமியின் பேச்சை சுட்டிக் காட்டி பகுத்தறிவு கருத்தை கூறியதற்காக அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத்துராமலிங்க தேவர் மிரட்டியதாகவும் இதையடுத்து நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான பி.டி.ராஜனும் அண்ணாவும் மன்னிப்பு கேட்டு விட்டு மதுரையே விட்டே வெளியேறியதாகவும் அண்ணாமலை கூறி இருந்தார்.
இவரது பேச்சிற்கு அதிமுக , திமுக மற்றும் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்காத அண்ணாமலை, தி இந்து ஆங்கில நாளேட்டில் இந்த செய்தி உள்ளதாக தெரிவித்தார்.ஆனால் அப்போது வெளியான செய்தி குறிப்புகளோடு அண்ணாமலையின் கருத்து தவறானது என்பதை தி இந்து நாளேடு அம்பலப்படுத்தி உள்ளது. அண்ணாவின் கருத்தில் முத்துராமலிங்க தேவர் முரண்பட்டதாக மட்டுமே செய்தி வெளியானது என்று கூறி இருக்கும் ஆங்கில நாளிதழ், தேவர் மிரட்டியது போன்றோ அண்ணா மன்னிப்பு கேட்டது போன்றோ எந்த பதிவுகளும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தி இந்து வெளியிட்டு இருக்கும் இந்த செய்தியின் மூலம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது அப்பட்டமான பொய் என்பது தெரியவந்துள்ளது.
The post பேரறிஞர் அண்ணா பற்றி அண்ணாமலை கூறியது அப்பட்டமான பொய்..ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியில் அம்பலம்!! appeared first on Dinakaran.