×

திருத்துறைப்பூண்டி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது

திருத்துறைப்பூண்டி, செப். 22: திருத்துறைப்பூண்டி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று துவங்கியது. இன்றும் தொடரும் என்று நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தெரிவித்துள்ளார். திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் இருந்து வேதாரண்யம் சாலை வரை ஒரே சாலை தான். இந்த சாலையில் இருந்து தான் மன்னார்குடி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பிரிவு நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி தெரு சாலைகள் உள்ளது.

நகரில் வாகன போக்குவரத்து அதிகமாக வருவதாலும், சாலைகளில ஆக்கிரமிப்புகள் உள்ளதாலும், இந்த ஒரே சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பல கடைகள் விளம்பர போர்டு சாலையில் வைப்பதாலும் வாகனங்கள் கண்ட இடங்களில் நிறுத்துவதாலும் எல்லா நேரங்களிலும் வாகனங்களில் பொருள் ஏற்றுவது இறக்குவதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவரச தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட போக முடியவில்லை. மேலும் நெடுஞ்சாலைதுறை நகராட்சி, வருவாய்துறை, காவல்துறை இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றி பல மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி வருகிறது. எனவே ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் இளம்வழுதி அறிவுறுத்தல் படி வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, காவல்துறை இணைந்து திருவாரூர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி தாசில்தார் கார்ல்மார்க்ஸ், நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் அய்யாதுரை, நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, நெடுஞ்சாலைதுறை இளநிலை பொறியாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நகராட்சி நகரமைப்பாய்வாளர் அருள்முருகன், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, சாலை ஆய்வாளர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரும்பாலான இடங்களில் உரியவர்களே ஆக்கிரமிப்பை அகற்றி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று (22ம் தேதி) தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு, ஆக்கிரமிப்பு செய்தால் ஆக்கிரமிப்பு அகற்றி அதற்கான செலவீனத்தொகை வசூல் செய்தும் அபராதம் விதிக்கப்படும். மேலும் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு நகரில் தெரு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்று நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தெரிவித்துள்ளார்.

The post திருத்துறைப்பூண்டி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Tiruthurapoondi ,Tiruthurapundi ,
× RELATED காற்று மாசை கட்டுப்படுத்த அரசு...