×

மனுநீதி சோழன் கல்தேர் மண்டபம் சீரமைப்பு நன்னிலம் ஒன்றிய பகுதியில் ஆய்வு வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

திருவாரூர், செப். 22: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் சாரு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் சாரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட மகராஜபுரம் நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணி, அதே ஊரில் பாரத பிரதமரின் குடியிருப்பு வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும் கடுவங்குடி ஊராட்சி மற்றும் அகரகொத்தங்குடி ஊராட்சிகளில் தலா ரூ.33 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறைகளுடன் கூடிய பள்ளி கட்டிடத்தையும், பில்லூர் ஊராட்சி தேவூர் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களை கொண்டு கச்சமடை வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதையும், அதே ஊரில் ரூ.11 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொதுவிநியோக கட்டிடத்தினையும், மாவட்டக்குடி ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்கப்பட்டு வருவதையும், காளியாகுடி ஊராட்சி நெடுங்குளம் பகுதியில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கான்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் சாரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு கலெக்டர் சாரு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தான கிருஷ்ண ரமேஷ், ராஜ்குமார், ஒன்றிய பொறியாளர்கள் செல்வசிகாமணி, வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மனுநீதி சோழன் கல்தேர் மண்டபம் சீரமைப்பு நன்னிலம் ஒன்றிய பகுதியில் ஆய்வு வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Manuneethi Cholan Kalther ,Nannilam Union ,Tiruvarur ,Manuneethi ,Cholan Kalther ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை