×

கமுதி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

கமுதி, செப். 22: கமுதி அருகே கே.எம்.கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி அருகே உள்ள தெரு பல வருடங்களாக சாலை வசதியின்றி மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுவது தொடர்கதையாக உள்ளது.

இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் ஏராளமான குடியிருப்புகள் இப்பகுதியில் உள்ளதால், சேறு நிறைந்த சாலையில் தேங்கும் தண்ணீரில் டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவ காரணமான கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயமும் உள்ளது. இச்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.

இந்த தொடர் பிரச்னை குறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பருவ மழைக்காலம் துவங்க இருப்பதால், இந்த சாலையை உடனடியாக சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கமுதி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Kamuti ,MM Singhambati ,Fort Puradasi ,Dinakaran ,
× RELATED கமுதி மின்வாரிய அலுவலகத்தில் விஷபூச்சிகள் தொல்லை அதிகரிப்பு