×

கில்லாடியாய் பணம் பறிக்கும் திருடன் செல்போன் திருடுவாராம்.. அதற்கான காசு தந்தா திருப்பி கொடுப்பாராம்…கரும்பு தோட்டத்துக்கு சாப்பாடோடு வர சொன்னவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

பண்ருட்டி: செல்போன் பறிக்கும் பலே திருடன் நூதன முறையில் பணம் பறிக்கும் ஆடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திராசு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழை பெருமாள் (44), விவசாயி. இவரது வீட்டில் கடந்த 14ம் தேதி செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது செல்போனை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போதும் கிடைக்கவில்லை. இதேபோல் பக்கத்து வீடுகளிலும் செல்போன்கள் காணாமல் போயிருந்தது. இந்நிலையில், திருடிய செல்போனில் இருந்து ஏழை பெருமாளின் மனைவிக்கு போன் போட்ட திருடன், ‘உங்கள் செல்போன் என்னிடம்தான் உள்ளது. உங்களது கணவரை பேச சொல்லுங்கள்’ என கூறி உள்ளார்.

ஏழைபெருமாள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த திருடன்,‘ ஒரே இடத்தில 4 செல்ல நான்தான் எடுத்தேன். உங்கள யாரையும் டிஸ்டர்பு பண்ணாம நானே எடுத்திட்டு வந்துட்டேன். நான் திருட்டு பையந்தான். சூழ்நிலை காரணமா ஆகிட்டேன். என்ன பண்றது. எனக்கு காசு வேணும். காசு கொடுக்குறீங்களா? நான் செல்ல ஒப்படைச்சுடுறேன். அவசரப்பட்டு போலீசுக்கு போய் கம்ப்ளைன்ட் பண்ணிடாதீங்க. ஏன்னா அவனே திருட்டு பையன். நீங்கள் என்ன பிடிச்சு, அடிச்சு ஒப்படைத்தாலும் ஒரு பிரயோஜனம் கிடையாது. ஏன்னா என்கிட்ட எவ்வளவு இருக்கோ வாங்கிட்டு அவன் என்ன வெளியே அனுப்பிடுவான்’ என்று கூறினான்.

அதற்கு ஏழைபெருமாள், ‘திடீர்னு 4 போனுக்கும் காசு கேட்டா எப்படி கொடுக்குறது. நீ எவ்வளவு கேட்கிறனு சொல்லு. யார்கிட்டயாவது வாங்கியாவது ரெடி பண்ணணும்ல. என்கிட்ட 2 ஆயிரம், 3 ஆயிரம் தான் இருக்குனா நீ கொடுத்துடுவீயா’ என்று கேட்டார். உடனே திருடன், ‘சாரிங்க.. எனக்கு 15 ஆயிரம் கொடுக்கணும் 4 போனுக்கும். இப்பவே 15 ஆயிரம் கொடுத்திட்டீங்கனா. நைட்டுக்குள்ள செல்ல ஒப்படைச்சுடுறேன். ஆனா நான் சொல்றா மாறிதான் செய்யணும். எனக்கு கொஞ்சம் சாப்பாடு எடுத்திட்டு வரணும். ஒரு ஓட்டல் கடையில் கொஞ்சம் சாப்பாடு வாங்கிட்டு வாங்க. நான் ஒரு இடத்துக்கு வர சொல்லுவேன். அங்க நீங்க வரணும். உங்க வண்டிய பார்த்த உடனே ஸ்டாப்னு சொல்வேன். நின்னுடணும். நின்ன உடனே அங்கிருந்து இறங்கி பொறுமையா வரணும். கொஞ்ச தொலவு. வந்துட்டோனே. ஒரு வெள்ள பையில் அந்த காச போட்டு வெச்சுக்கோ. அந்த பையோட வந்தேட்டே இரு. ஒரு இடத்தில அந்த பைய வைக்க சொல்லுவேன்.

அங்கேயே அந்த பை வெச்சுடணும். வெச்சுட்டு அப்படியே திரும்பி கொஞ்ச தொலவு போயிட்டே இருக்கணும். நான் காசு வெச்ச இடத்துக்கு வந்துட்டே இருப்பேன். நீ போயிகிட்டே இருக்கணும். நான் அந்த பையில் இருந்த காச எடுத்துட்டு போன அந்த பையில வெச்சு லைட் அடிச்சு உங்கள திரும்ப சொல்லி முஞ்சுக்கு நேரா தூக்கி காட்டுவேன். அத பார்த்துட்டு நீங்க வண்டி எடுத்துட்டு கிளம்பிட்டே இருக்க வேண்டிதான். அதுவரைக்கும் கால் கட்டே ஆக கூடாது. இதுதான் என் ஐடியா. இதுக்கு ஓகே வா..’ என்று முடிகிறது.

இதுகுறித்து ஏழை பெருமாள் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து திருடன் சொன்ன கரும்பு தோட்டத்தை சுற்றிவளைத்த போலீசார், கரும்பு தோட்டத்தில் லைட்டை பார்த்ததும் தலை தூக்கிய திருடனை அப்படியே கொத்தாக தூக்கி சென்று கைது செய்தனர். விசாரணயில் அவன், திண்டிவனத்தை சேர்ந்த அய்யனார் என்பதும், தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

The post கில்லாடியாய் பணம் பறிக்கும் திருடன் செல்போன் திருடுவாராம்.. அதற்கான காசு தந்தா திருப்பி கொடுப்பாராம்…கரும்பு தோட்டத்துக்கு சாப்பாடோடு வர சொன்னவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Killadiai ,PANRUTI ,Cuddalore ,Gilladiay ,Danda ,
× RELATED ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை