×

திருப்பூர் அருகே கற்களை வீசி வீட்டின் ஜன்னல், கதவுகளை உடைத்தவர்கள் மீது எஸ்.பி.யிடம் புகார் மனு

 

திருப்பூர், செப்.22: திருப்பூர், கண்டியன்கோவில் அடுத்த முதிய நெரிச்சல் பகுதியை சேர்ந்த சோமன் என்பவர் தனது உறவினர்களுடன் வந்து திருப்பூர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு சசிகுமார் மற்றும் பிரவீன் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். நான் பட்டியலின அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவன் ஆவேன். நான் தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி பணி செய்து வருகிறேன். எங்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகன் மகன் கார்த்தி என்பவருக்கும் எனக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் கடந்த 3-ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 22ம்தேதி அன்று கார்த்திக் குடும்பத்திற்கும் எங்கள் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. அதனால் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் இருதரப்பு புகாரின் அடிப்படையில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதியப்பட்டது. மேலும் எனது இரண்டு மகன்களுடன் 3 பேரும் 50 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தோம். பிறகு பிணையில் வந்துள்ளோம். தற்போது 100 நாட்களுக்கு மேலாகியும், நானும் எனது குடும்பத்தாரும் சொந்த ஊருக்குள் வரக்கூடாது எனவும், வந்தால் விடமாட்டோம் எனவும், அப்படி வந்தால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று சில ஆதிக்க சாதியினரின் தூண்டுதலின் பேரில், எனது குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர்.

கடந்த 14ம்தேதி நானும், எனது முத்த மகன் சசிகுமாரும் சென்று இரவு முதிய நெரிச்சலில் தங்கியிருந்தோம். மறுநாள் காலை சுமார் காலை7 மணிக்கு பிரகாஷ், சந்தியா, கிட்டாள் ஆகியோர் சேர்ந்து எனது வீட்டின் கதவு ஜன்னல் மீது சரமாரி கற்களை வீசி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் இரு தரப்பினரையும்அழைத்து விசாரணை செய்தனர். தற்போது நான் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே என்னையும் எனது மகனையும் மிரட்டி ஜன்னல் கதவை சேதப்படுத்திய பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுத்தும், நானும் எனது குடும்பத்தாரும் ஊருக்குள் சென்று சுதந்திரமாக வாழ சட்ட, சமூக பாதுகாப்பு ஏற்படுத்தியும், இச்சம்பவங்களுக்கு தூண்டுதலாக உள்ள பிற சமூக நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

The post திருப்பூர் அருகே கற்களை வீசி வீட்டின் ஜன்னல், கதவுகளை உடைத்தவர்கள் மீது எஸ்.பி.யிடம் புகார் மனு appeared first on Dinakaran.

Tags : SP ,Tirupur ,Soman ,Kandianko, Tirupur ,
× RELATED ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது