×

வீடுகள், கட்டுமான பணியிடங்களில் கொசுப்புழு கண்டறியப்பட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம்: டெங்கு காய்ச்சலை தடுக்க களஆய்வு தீவிரம்; தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் வீடுகள், கட்டுமான பணியிடங்களில் அதிகாரிகள் தீவிர கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்து, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். தாம்பரம் பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 14 மருந்து தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கும் 12 ஸ்பிரேயர்கள், 7 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 16 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 14 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பூங்காக்கள், சாலை பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு, திறந்த நிலையில் உள்ள கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு வளரிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம் பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் 182 இடங்களில் மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 47 கட்டுமான இடங்களில் கொசுப்புழு உற்பத்தி கண்டயறியப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளபட்ட களஆய்வில் 1,456 இடங்களில் கொசுப்புழு உருவாவதற்கு வாய்ப்புள்ள பயன்பாடற்ற 194 டயர்கள், 2,112 தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமென்ட் தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால் அவற்றை உடனடியாக அகற்றி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதைத் தடுத்திட வேண்டும்.

கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாதவண்ணம் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரம் ஒருமுறை அகற்றி தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர் தேங்கும் பொருட்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.
மேலும், நீர் வழித்தடங்கள் மற்றும் மழைநீர் செல்லும் கால்வாய்களின் அருகே குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை கொட்டுவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். நிகழ்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

* தாம்பரம் மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 1,456 இடங்களில் கொசுப்புழு உருவாவதற்கு வாய்ப்புள்ள பயன்பாடற்ற 194 டயர்கள், 2,112 தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post வீடுகள், கட்டுமான பணியிடங்களில் கொசுப்புழு கண்டறியப்பட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம்: டெங்கு காய்ச்சலை தடுக்க களஆய்வு தீவிரம்; தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,TAMBARI ,Thambaram Corporation ,Tambaram Corporation ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரசில்...