×

அவுட்சோர்சிங் முறையை கைவிட கோரி மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

 

ஈரோடு, செப். 22: ஈரோட்டில் மின்சார வாரியத்தில் கான்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறையை கைவிடக்கோரி மின் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு காளைமாடு சிலை அருகே தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நேற்று ஒருநாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஈரோடு பிரிவின் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் இளங்கோ, ஈரோடு மண்டல செயலாளர் ஜோதிமணி, மாநில துணை செயலாளர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில், மின்சார வாரியத்தில் வேலையை பறிக்கும் கான்ட்ராக்ட், அவுட்சோர்சிங் திட்டத்தையும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியினையும் கைவிட வேண்டும்.

இ-டெண்டர் முறையையும் கைவிட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு விடுப்பு, விருப்ப மாறுதல், உட்பட வாரிய பணியாளர்களுக்கான பணி விதிமுறைகளை அமலாக்க வேண்டும். பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டிய இரட்டிப்பு ஊதியம், மருந்து செலவினங்கள், ஜிபிஎப், முன்பணம், பகுதி இறுதி தொகை உட்பட பண பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும்.

1-12-2019ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஓழியர்களையும், பகுதி நேர பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், சேலம் கருப்பணன், மேட்டூர் சுந்தரராஜன், கோபி பாண்டியன், மாநில செயற்குழு உறப்பினர்கள் சக்திவேல், அன்பு, வெங்கடேசன், பெரியசாமி, சேகர், வீரமணி உட்பட ஏராளமான மின் ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post அவுட்சோர்சிங் முறையை கைவிட கோரி மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Dharna ,Erode ,Erode Electricity Board ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா