×

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை

பெரம்பூர்: கொடுங்கையூரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கினார். கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்தவும், மாணவர்கள் தவறான பாதைக்குச் சென்று விடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் அவ்வப்போது கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொடுங்கையூர் திருத்தங்கல் நாடார் கல்லூரியில் வடசென்னை மாணவர்களின் வாழ்க்கை முறை பற்றிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்கள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது குறித்து எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சுந்தரசேகரன் பேசினார். இதில் அவர் ஒரு இன்ஸ்பெக்டராக அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மாணவர்களுக்கு மேற்கோள் காட்டி பேசினார். போதைக்காக ஒரே வீட்டில் இருவரை கொலை செய்த மாணவர்களின் நிலை தற்போது என்ன ஆனது, அவர்களது குடும்பங்கள் எவ்வாறு பரிதவிக்கிறது என்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் இரு கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டு அதில் சில மாணவர்களை கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, அவர்களின் எதிர்காலம் கருதி சிலரை கைது செய்யாமல் விட்டதாகவும், தற்போது அதில் ஒரு மாணவர் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளதாகவும் உருக்கமுடன் தெரிவித்தார்.

மேலும் படிக்கின்ற வயதில் சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற பதிவுகளை தேடக்கூடாது, பயன்படுத்தக்கூடாது என்பது குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். போதைப் பழக்கத்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் படிக்கும் வயதில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானால் மாணவர்கள் எதிர்காலத்தில் எது போன்ற மாற்றங்களை சந்திக்க நேரிடும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Perambur ,MKP Nagar ,Kodunkaiyur ,Dinakaran ,
× RELATED எம்.கே.பி நகர் பகுதியில் ஒரே வாரத்தில் 8...