தாம்பரம்: குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு (ஐஎல்டி) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த திம்பால் ஷா (42) என்ற பெண்ணுக்கு அதிக சிக்கலான இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர். ஐஎல்டி என்பது நுரையீரலில் உள்ள மிகச்சிறிய காற்றுப்பைகளை பாதித்து, சுவாசிப்பதை அடிக்கடி கடும் சிரமமானதாக மாற்றக் கூடியதாகும். புறாக்களின் கழிவுகள், எச்சங்களினால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. திம்பால் ஷா புறாக்கள் வளர்த்து வந்த நிலையில் அவருக்கு இந்த நோய் ஏற்பட்டது.
குஜராத் மட்டுமல்லாது மும்பை, டெல்லியிலும் மருத்துவ சிகிச்சைகள் பெற்றும் குணமடையாததால் சென்னையிலுள்ள ரேலா மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக வந்தார். இவரது சிகிச்சைக்கான செலவுகளுக்கு கிரவுட்பண்டிங் பரப்புரை வழியாகவும், அரசு மற்றும் ரேலா மருத்துவமனை வழங்கிய ஆதரவின் வழியாகவும் நிதி திரட்டப்பட்டது. இவருக்கு இருபக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்ய ரேலா மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. பொருத்தமான ஜோடி நுரையீரல்களுக்காக மாநிலத்தின் உறுப்புமாற்று பதிவகத்தில் திம்பால் ஷா பதிவு செய்யப்பட்டார்.
பின்னர், மூளைச் சாவடைந்த ஆந்திராவைச் சேர்ந்த 19வயதான இளம்பெண்ணின் ஒருஜோடி நுரையீரல்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்டு, ரேலா மருத்துவமனை மருத்துவ குழுவினர் மூலம் திம்பால் ஷாவுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதுகுறித்து ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகமது ரேலா கூறுகையில், ‘‘தூய்மையான சுற்றுச்சூழலை நாம் பராமரிப்பது முக்கியம். பல ஆண்டுகளாக பறவைகளின் கழிவுகள், எச்சங்கள், தூசி மற்றும் சிறகுகளால் நுரையீரல் சேதம், மிகை உணர்திறன் மூச்சுப்பை அழற்சி மற்றும் நாட்பட்ட சுவாசப்பாதை செயலிழப்பு ஆகியவை ஏற்படக்கூடும்” என்றார்.
ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் இளங்குமரன் கூறுகையில், ‘‘ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் சிறப்பாக செயலாற்றி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். பொதுமக்கள் பறவைகளால் சுவாச பாதிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படும்போது நோய் பாதிப்பு ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்குச் சென்று முறையான சிகிச்சை பெற்றால் கடுமையான பாதிப்புகளை தவிர்க்க முடியும்” என்றார். நிகழ்வின்போது ரேலா மருத்துவமனையின் மருத்துவ குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் பிரேம் ஆனந்த் ஜான், சரண்யா குமார், பென்னர் ஜோயல் சாத்ராக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post 42வயது குஜராத் பெண்ணுக்கு இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை: ரேலா மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.