×

மணியார்டரில் வீடு தேடி வந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை: இன்ப அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

பாடாலூர்: பெரம்பலூர் அருகே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மணியார்டர் மூலம் வீடு தேடி வந்ததால் இல்லத்தரசிகள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தகுதியிருந்தும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு விட்டது. விண்ணப்பித்தபோது அளித்த வங்கிக் கணக்கு தற்போது செயல்பாட்டில் இல்லாவிட்டால் அவர்களை வங்கிக்கு வரவழைத்து கணக்கை புதுப்பித்து உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பித்த பலருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை. அவர்களுக்கு குறுஞ்செய்தியும் வரவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் வங்கி கணக்கு இல்லாத மற்றும் வங்கி கணக்குடன் ஆதார், பான்கார்டு எண்களை இணைக்க தவறியதால் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாக பெண்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தகுதியான பயனாளிகளுக்கு நேற்று அஞ்சல ஊழியர்கள் வீடு தேடி வந்து ₹1000 வழங்கினர். இதை எதிர்பார்க்காத இல்லத்தரசிகள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்களுக்கு அஞ்சலக ஊழியர்கள் அங்கேயே ‘‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’’ வங்கி கணக்கு தொடங்கி தந்தனர்.

அஞ்சலக வங்கி கணக்கு உள்ளவர்கள் உரிமைத் தொகை பெற அஞ்சலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தங்களிடமே கைவிரல் ரேகையை பதிவு செய்து தொகையை பெற்று கொள்ளலாம் என்று கூறி அந்த தொகையை கொடுத்தனர். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் தொகையை பெறலாம் என்று தெரிவித்தனர். உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்தில் இருந்தவர்களுக்கு மணியார்டர் மூலம் வீடுதேடி வந்து தொகையை தந்ததால் இல்லத்தரசிகள் இன்ப அதிர்ச்்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

The post மணியார்டரில் வீடு தேடி வந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை: இன்ப அதிர்ச்சியில் இல்லத்தரசிகள் appeared first on Dinakaran.

Tags : Badalur ,Perambalur ,
× RELATED பூதலூர் வட்டம் புதுக்குடியில் ரூ.50 கோடியில் கால்நடை தீவன தொழிற்சாலை