×

கலைஞர் மகளிர் உரிமை தொகை வராத நிலையில் இ-சேவை மையத்தில் குவிந்த இல்லத்தரசிகள்

திருத்தணி: கலைஞர் மகளிர் உரிமை தொகை வராத நிலையில் இ-சேவை மையத்தில் இல்லத்தரசிகள் குவிந்தனர். திமுக தேர்தல் அறிக்கையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் அறிவித்திருந்தது. இதையடுத்து கடந்த, 15ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கோடியே, 6 ஆயிரம் பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். உரிமைத் தொகை வழங்க கோரி விண்ணப்பித்திருந்த, 53 லட்சம் மகளிர்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்யலாம், விடுபட்டவர்கள் புதியதாக இ-சேவை மையங்களில் கடந்த, 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் அதற்கு முந்திய தினமும் இ – சேவை மையத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான சர்வர் வேலை செய்யாததால் மகளிர் பல மணி நேரம் இ-சேவை மையங்களில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், நேற்று சர்வர் வேலை செய்ததால் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், மொபைல் எண் மற்றும் புகைப்படத்துடன் பெண்கள் குவிந்தனர்.

அவர்கள் விண்ணப்பிக்கும் போது, ஒரு சிலருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கம் வந்துள்ளது. சிலருக்கு பரிசீலனை உள்ளது என தகவல்கள் வந்தன. ஒரு சில குடும்பங்களில் அரசு ஊழியராக இல்லாதபோதும், அந்த குடும்பத்தில் அரசு ஊழியர் ஒருவர் இருப்பதாக கூறி குறுஞ்செய்தியும் வந்துள்ளது. அதே போன்று ஒரு சிலருக்கு நான்கு சக்கர வாகனம் உள்ளது என்ற தகவல் வந்துள்ளது. ஆனால், உண்மையிலேயே அந்த வீட்டில் எந்த விதமான நான்கு சக்கர வாகனங்கள் இல்லை என்று கூறுகின்றனர்.

கூலி வேலை செய்பவர்களுக்கும் வருமான வரி செலுத்துபவர் என பதில் வந்துள்ளது. ஒரு சிலருக்கு ரேஷன் கார்டு இல்லை எனவும் தகவல் வந்துள்ளது. ஒரு சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு உள்ள விதிமுறைகள் இருந்தும் மேல்முறையீடு செய்ய இயலாது என்று பதில் வருவதாக கூறி அனுப்பி உள்ளனர். இதனால் பல பெண்கள் விரக்தியில் திரும்பி சென்றனர். சரியான நபர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*ஆண் போலீசை பணிக்கு அமர்த்த வேண்டும்
ஆவடியில் பெண்களுக்கான இந்த உரிமை தொகை மேல்முறையீட்டு முகாமில், போலீசார் சரியான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாமல் இருந்தனர். பெண் காவலர்களை பணி அமர்த்தாமல், ஆண் காவலர்களை பணியமத்தியுள்ளனர். இதனால் அங்கு பணியில் இருந்த, போலீஸ்காரர் கூட்டத்தை சரி செய்வதாக கூறி, பெண்கள் பலரை கையை பிடித்து இழுத்து ஒருமையில் பேசிய சம்பவம் அங்கிருந்த அனைவரின் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், கூட்டத்தில் நின்ற பட்டாபிராம், மாடர்ன் சிட்டி பகுதியைச் சேர்ந்த கிரேஸ் நவநீதம்(66) வைத்திருந்த இரண்டு கைப்பையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அந்த பையில் இரண்டு பர்ஸ் ரூ.2000 பணம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டு சாவி உள்ளிட்டவை அதில் இருந்ததாக கூறி அவர் அழுது நின்றது அனைவரையும் கண்ணீர் வர செய்தது.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை வராத நிலையில் இ-சேவை மையத்தில் குவிந்த இல்லத்தரசிகள் appeared first on Dinakaran.

Tags : Tiritani ,
× RELATED திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.55 கோடி காணிக்கை