×

செங்கரை காட்டுச்செல்லி அம்மன் கோயிலில் சேதமடைந்த பெண்கள் ஒப்பனை அறை: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் செங்கரை கிராமத்தில் புகழ்பெற்ற காட்டுச்செல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். அவ்வாறு வரும் பக்தர்களில் பெண் பக்தர்களே அதிக அளவில் காணப்படுவார்கள். அவர்கள் அங்குள்ள குளத்தில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

பின்னர் அவர்கள் உடை மாற்ற மரம் மற்றும் செடிகளின் அருகில் மறைவாக சென்று மாற்றி வந்தனர். இதனால் பெண்களுக்காக குளிக்கவும், உடை மாற்றவும் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்களும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி அப்போதைய கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ சேகர் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.4.75 லட்சம் செலவில், 2011-12ம் ஆண்டு பெண்களுக்காக கழிவறை மற்றும் 10 குளியல் அறைகள் கொண்ட கட்டிடம் கட்டிக்கொடுத்தார். இதை கோயிலுக்கு வரும் பக்தர்களும், அப்பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது பின்னர் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாடற்று புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் அருகில் உள்ள சமுதாய கூடத்தை தான் குளிப்பதற்கும், உடை மாற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். அதிலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தால் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, குளியலறையை சீரமைத்து தர வேண்டும், மேலும் அங்குள்ள சிமெண்ட்டால் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. எனவே இதையும் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்கரை காட்டுச்செல்லி அம்மன் கோயிலில் சேதமடைந்த பெண்கள் ஒப்பனை அறை: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Amman ,Poothukkotta ,Wildchelli Amman Temple ,Allapuram Union Sengkari ,Uthukkotta ,Ikoil ,Sancor ,Amman Temple ,
× RELATED வெள்ளிக்கிழமை: அருள் தரும் அங்காள அம்மன் வழிபாடு..!!