செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் கடந்த 2022ம் ஆண்டு ஆண்டு கோயில் திருவிழா நடத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 15 குடும்பங்கள் பங்கேற்கவில்லை. இதனால், பொத்தேரி பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அசோகன் (52) திருவிழா தொடர்பான நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காத குடும்பத்தினர் இனி எந்த திருவிழாவிலும் கலந்துக்கொள்ள கூடாது என, அப்பகுதி பொதுமக்களிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், பொத்தேரி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சிட்டிபாபுவின் மகன் கார்த்திக் (22), அசோகனிடம் ‘‘நாங்கள் திருவிழா தொடர்பான கூட்டத்தில் பங்கேற்காத காரணத்தினால் ஏன் எங்களை ஒதுக்கி வைக்க வேண்டும்,’’ என கேட்டுள்ளார்.
இதனால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு (18ம் தேதி ) பொத்தேரியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோயில் தங்கள் வேண்டுதல்களை சூறை தேங்காயை உடைத்து கார்த்திக், அவருடைய அம்மாவும் நிறைவேற்றினர். அப்போது கோயில் வளாகத்தில் இளைஞர்களுக்கும், கார்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கார்த்திக்கின் அம்மா மடக்கி கார்த்திக்கை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த 18ம் தேதி விநாயகர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.
ஊர்வலம் பொத்தேரி பஜனை கோயில் அருகே வந்த போது, இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த கார்த்திக் (22) என்பவர் எனது வீட்டின் அருகே பட்டாசுகளை வெடிக்க கூடாது என கூறி உள்ளார். இதனால், அந்த இளைஞர்கள் கார்த்திக் வீட்டின் மீதும், அவர்கள் உறவினர்கள் மீதும் பட்டாசு வீசியதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த 10 பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கை செங்கல்லால் சரமாரியாக அடித்து தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் பொத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புகாரின்பேரில், மறைமலைநகர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கார்த்திக்கை தாக்கியது அதேபகுதியை சேர்ந்த ராகேஷ், சுரேஷ், கீர்த்தி, கந்தன், நவீன், சிவா மற்றும் லோகேஷ் என்பதும், இவர்களுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த வருடம் பேனர் கிழித்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. கார்த்திக்கை தாக்கி விட்டு தப்பியோடியவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக, போலீசார் பொத்தேரி பகுதியை சேர்ந்த ராகேஷ் (20), ஜெயசந்திரன் (22), சிரஞ்சீவி (19) ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நத்தா, கோபால், நவின், லோகேஷ், அசோகன் ஆகிய ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
The post கோயில் திருவிழா தொடர்பான தகராறில் சரமாரியாக தாக்கி வாலிபர் படுகொலை : 3 பேர் கைது; 5 பேருக்கு வலை appeared first on Dinakaran.