×

மாமல்லபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீர்: நோய் பரவும் அபாயம், நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சிக்குட்பட்ட வசந்தபுரி பகுதியில் பல்வேறு தெருக்களில் ஏராளமான வீடுகள் உள்ளது. இங்கு, வசந்தபுரி 3வது மெயின் தெரு, 2வது மற்றும் 6வது குறுக்கு தெருக்களில் குடியிருப்பு பகுதியில் சாலைகள் சில இடங்களில் உயர்ந்தும், சில இடங்களில் தாழ்ந்தும் உள்ளது. இதனால், மழை பெய்யும்போது அப்பகுதியில் குடியிருப்புகளை சுற்றி அதிகளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அங்கு குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தேங்கி நிற்கும் மழை நீரால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ரேஷன் கடை, மருத்துவமனை, கடைவீதி போன்ற இடங்களுக்கு சென்று வருபவர்களுக்கும் கடும் சிரமம் ஏற்படுகிறது.

மழைநீர் தொடர்ந்து பல நாட்கள் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு வசந்தபுரி 3வது மெயின் தெரு, 2வது மற்றும் 6வது குறுக்குத் தெருக்களில் பல நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை மோட்டார் மூலம் அகற்றி, பொது மருத்துவ முகாம் அமைத்து, கொசு மருந்து அடித்து தூய்மை படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீர்: நோய் பரவும் அபாயம், நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Vadakadambadi ,
× RELATED மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள்...