×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அதிமுக பிரமுகர் பலி: மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அதிமுக பிரமுகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது, மகன் ஏழுமலை (45). இவர், 21வது வார்டு அதிமுக கிளை செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு, கடந்த 19ம் தேதி நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அதிமுக பிரமுகர் ஏழுமலைக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென வயிறு உப்பி, சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஏழுமலையின் மனைவி டாக்டரை அழைத்து, ஊசி போட்டு சிகிச்சை அளிக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த டாக்டர், ‘‘இங்கு நீ டாக்டரா அல்லது நான் டாக்டரா,’’ என அலட்சியமாக பேசிவிட்டு, ஏழுமலைக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இரவு 9 மணியளவில் ஏழுமலைக்கு டாக்டர் ஊசி போட்டுள்ளார். அதன்பிறகு ஏழுமலை முழுமையாக சிறுநீர் கழித்து, உப்பிய வயிறு குறைந்த சில மணி நேரத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும், 100க்கும் மேற்பட்ட ஏழுமலையின் உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, டாக்டரின் அலட்சிய போக்கினால்தான் ஏழுமலை உயிரிழந்தார் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, நோயாளிகளின் உறவினர்கள், ‘‘செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிப்பதில்லை. மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் குறைகளை கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று வலியுறுத்துகின்றனர்.

The post செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அதிமுக பிரமுகர் பலி: மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Government ,Chengalpattu ,Chengalpattu Government Hospital ,Chenkalpattu Government Hospital ,Dinakaran ,
× RELATED செங்கை அரசு மருத்துவமனையில் மீட்கப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரலாம்