×

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் குவிந்த ஏராளமான பெண்கள்: பயிற்சி கலெக்டர் ஆய்வு

கூடுவாஞ்சேரி: கலைஞர் உரிமை தொகைக்காக வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெண்கள் குவிந்தனர். அப்போது, பயிற்சி கலெக்டர் ஆனந்த் சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகாவில் வண்டலூர், கூடுவாஞ்சேரி மற்றும் மாம்பாக்கம் ஆகிய குறு வட்டங்கள் உள்ளன. இதில், 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த கலைஞர் மகளிர் உரிமை தொகையை தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து, கடந்த 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகையை தொடங்கி வைத்தார். அன்றைய தினமே தமிழகம் முழுவதிலும் உள்ள மகளிருக்கு அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இதற்காக அவரவர் செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தியும் வந்தது. இதில், குறுஞ்செய்தி வராதவர்கள் மாவட்ட தலைநகரம், தாலுகா அலுவலகம் மற்றும் அந்தந்த ஊர்களில் உள்ள இ-சேவை மையங்களில் சென்று குறுஞ்செய்தி மற்றும் மகளிர் உரிமை தொகை வராததற்கு காரணம் தெரிந்துகொண்டு 18ம் தேதி முதல் மேல்முறையீடு செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

இதில், 19ம் தேதி முதல் பொதுமக்கள் வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி மையத்துக்கும், அந்தந்த ஊர்களில் உள்ள இ-சேவை மையங்களுக்கும் சென்றனர். ஆனால், நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை சர்வர் பழுதானதால் அதற்கான காரணங்களை தெரிந்துகொள்ள முடியாமலும், மேல்முறையீடு செய்து விண்ணப்பிக்க முடியாமலும் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில், 2வது நாளான நேற்று முன்தினம் காலை முதல் இல்லத்தரசிகள் குவியத்தொடங்கினர்.

இதில், காலை 11 மணி முதல் சர்வர் பழுது சரி செய்யப்பட்டது. இதனையடுத்து, உதவி மையத்தில் இருந்த ஊழியர்கள் லேப்டாப் மூலம் குறுஞ்செய்தி வராததற்கான காரணங்களை எடுத்து கூறினர். அப்போது, அங்கு திடீரென வந்த பயிற்சி மாவட்ட கலெக்டர் ஆனந்த்சிங் உதவி மையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் துணை தாசில்தார் அப்துல்ராசிக் ஆகியோர் பொதுமக்கள் கூறிய பிரச்னைகளை பயிற்சி கலெக்டரிடம் கூறினர்.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் குவிந்த ஏராளமான பெண்கள்: பயிற்சி கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vandalur Thaluka ,Kooduwancheri ,Vandalur ,Thaluka ,Dinakaran ,
× RELATED வண்டலூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில்...