×

அனகாபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிகளுக்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பம்மல்: பம்மல் அருகே அனுமதியின்றி செயல்பட்ட 3 கல்குவாரிகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளான திரிசூலம், பம்மல், அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு இயங்கும் கல்குவாரிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி இயங்குவதுடன், வீடு கட்ட பயன்படுத்தும் எம் சாண்டில் சாதாரண மணலை கலப்படம் செய்தும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு, ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதன் அடிப்படையில், கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின்பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் திரிசூலம், பம்மல், அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 4 நிறுவனங்கள் மட்டுமே அரசு அனுமதி பெற்று உரிய முறையில் செயல்படுவது தெரியவந்தது.

மேலும் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரசிடம் போதிய அனுமதி பெறாமலும், கட்டிடம் கட்ட பயன்படுத்தும் எம் சாண்ட் மணல் போதிய தரம் இல்லாமல் இருந்ததுடன், அதில் கடல் மணல் கலப்படம் செய்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து முதல் கட்டமான 3 கல்குவாரி நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், 4 நிறுவனங்களுக்கு அவை தொடர்ந்து செயல்படாத வகையில், அதன் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post அனகாபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிகளுக்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Anagaputhur ,Pammel ,Anakaputtur ,Dinakaran ,
× RELATED பெருங்களத்தூர் வணிக வளாகத்தில் உள்ள 27...