×

ஆஸ்திரேலியாவை வென்று மொஹாலி ராசியை மாற்றுமா இந்தியா

மொஹாலி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்.5ம் தேதி முதல் நவ.19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இங்கிலாந்து-அயர்லாந்து, வங்கதேசம்-நியூசிலாந்து என களம் காணும் அணிகளின் வரிசையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. முதல் ஆட்டம் இன்று மொஹாலியில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 2வது ஆட்டம் செப்.24ம் தேதி இந்தூரிலும், செப்.27ம் தேதி ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளன. இந்த 3 ஆட்டங்களும் பகல்/இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளன.

ஆசிய கோப்பையை வென்ற உற்சாகத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கூடவே ஆசிய கோப்பையில் களம் கண்ட அதே அணி இந்த முறை கே.எல்.ராகுல் தலைமையில் களம் காணுகிறது. ரோகித், கோஹ்லிக்கு ஒய்வு தரப்பட்டுள்ளது. அக்சர் படேலுக்கு பதில் புதிதாக களம் காணப்போவது அஸ்வினா, வாஷிங்டன் சுந்தரா என்பதுதான் கேள்வி. அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் பேட்டிங்கிலும் இருவரும் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அணித் தேர்வு குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தாலும், வெற்றி வசப்படுவதால் இந்தியா தப்பித்து வருகிறது. இப்போது புதிய சேர்க்கைகளும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளன. அதையும் சமாளிக்க இந்தியாவுக்கு வெற்றி அவசியம். அதுமட்டுமல்ல உலக கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் ஆஸியைதான் இந்தியா சந்திக்க உள்ளது.

அதற்கு முன்னோட்டமாக இப்போதே வெற்றியுடன் தொடங்குவது மனதளவில் இந்திய அணியை மேலும் வலுப்படுத்தும். ஆனால் மொஹாலியில் 27 ஆண்டுகளாக இந்திய அணி, ஆஸியை வீழ்த்தியதில்லை என்ற வரலாறும் உள்ளது.
கூடவே இந்திய அளவுக்கு பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி அணிக்கு நெருக்கடிகள் இல்லை. ஆனால் முக்கிய வீரர்கள் காயத்தில் இருந்து இன்னும மீளவில்லை. அதிலும் சில நாட்களுக்கு முன்பு முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸி பலத்த அடி வாங்கியுள்ளது. அதிலிருந்து மீண்டு, உலக கோப்பையை உற்சாகமாக எதிர்கொள்ள ஆஸிக்கும் வெற்றி அவசியம்.

* அணி விவரம்:
இந்தியா: கேஎல் ராகுல்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் அய்யர், சும்பன் கில், சூரியகுமார் யாதவ், ஆர்.அஷ்வின், ஆர்.ஜடேஜா, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்

* ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ்(கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லீஸ்(விக்கெட் கீப்பர்கள்), மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், சீன் அப்போட், கேமரான் கிரீன், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்மேல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் எல்லீஸ், ஜோஷ் ஹசல்வுட், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா, மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸம்பா

* நேருக்கு நேர்…
இந்த 2 அணிகளும் சர்வதேச களத்தில் 146 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் ஆஸி 82 ஆட்டங்களிலும், இந்தியா 54ஆட்டங்களிலும் வென்றுள்ளன. எஞ்சிய 10 ஆட்டங்கள் கைவிடப்பட்டன.

* கடைசியாக…
இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 3 ஆட்டங்களிலும், இந்தியா 2 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

* தனித்தனியே….
கடைசியாக வெவ்வேறு அணிகளுடன் விளையாடிய 5 ஆட்டங்களில் இந்தியா 4 ஆட்டங்களில் வெற்றியையும், ஒரு ஆட்டத்தில் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆஸி 2 ஆட்டங்களில் வெற்றியையும், 3 ஆட்டங்களிலும் தோல்வியையும் சந்தித்து இருக்கிறது.

* இந்தியாவில்…
இந்திய மண்ணில் இந்த 2அணிகளும் விளையாடிய 67 ஆட்டங்களில் ஆஸி 32, இந்தியா 30 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியுள்ளன. 5 ஆட்டங்கள் மழை காரணமாக கைவிடப்பட்டன.

* மொஹாலியில்…
இந்த அரங்கில் 2 அணிகளும் இதுவரை 5 முறை மோதிப் பார்த்துள்ளன. அதில் 4ஆட்டங்களில் ஆஸி வெற்றி வாகை சூடியிருக்கிறது.

The post ஆஸ்திரேலியாவை வென்று மொஹாலி ராசியை மாற்றுமா இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Australia ,Cricket World Cup ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை...