×

17 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் நாளை முதல் கடலில் கரைக்க அனுமதி: பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார்

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,519 விநாயகர் சிலைகள், வழிபாடு முடிந்து நாளை மற்றும் நாளை மறுநாள் பட்டினப்பாக்கம் பகுதியில் கரைக்க மாநகர காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கடந்த 18ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னை மாநகரில் மட்டும் 1,519 சிலைகள் வைத்து வழிபாடு நடத்த இந்து அமைப்புகளுக்கு போலீசார் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினர். தற்போது, விநாயகர் சிலைகளை கரைக்க இந்து அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிலைகளை 17 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க சென்னை காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, சிலைகளை கரைக்க பட்டினப்பாக்கம், பல்கலை நகர், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி விநாயகர் சிலைகளை கரைக்க நாளை பாரதிய சிவசேனா அமைப்பினரும், நாளை மறுநாள் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 16,500 காவலர்கள் மற்றும் 2 ஆயிரம் ஊர்காவல்படையினர் பாதுகாப்பு பணி ஈடுபட உள்ளனர். சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் இணைக்கப்பட்ட கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதிலும் இருந்து கொண்டு வரப்படும் சிலைகளை கன்வேயர் பெல்ட், கிரேன்கள், படகுகள் உதவி கொண்டு சிலைகளை கடலில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் அனுமதியுடன் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில், ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: டிஜிபி வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகளை கரைக்க கடந்த 18ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை ஊர்வலங்கள் மற்றும் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி 20ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 18,357 சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. மேலும் 21ம் தேதி 61 ஊர்வலங்கள் நடத்தப்பட்டு 1664 சிலைகளும், 22ம் தேதி 55 ஊர்வலங்களில் 1160 சிலைகளும் கரைக்கப்பட்டுள்ளன.

மேலும், 23ம் தேதி 18 ஊர்வலங்களில் 390 சிலைகளும், 24ம் தேதி 82 ஊர்வலங்களில் 3366 சிலைகளும் எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. மேலும் அனைத்து நீர் நிலைகளுக்கும் காவல் துறையினரால் தகுந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

The post 17 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் நாளை முதல் கடலில் கரைக்க அனுமதி: பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Chennai ,
× RELATED கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் அளவீடு