×

விஜபிகள் கோர்ட்டுக்கு வரும்போது எத்தனை வழக்கறிஞர்கள் வரலாம் என்ற விதியை வகுக்க கோரி பொதுநல வழக்கு: தமிழ்நாடு பார்கவுன்சில் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்ற பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடஞ்சல் ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பார் கவுன்சில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் என்.மகேந்திரபாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டி.எம்.கே. பைல்ஸ் தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியது.

இதையடுத்து, கடந்த ஜூலை 14ம் தேதி அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானபோது, நீதிமன்ற அறையில் அவரது சார்பில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர். நீதிமன்ற அறை மட்டுமல்லாமல் அந்த வளாகம் முழுவதும் பாஜக வழக்கறிஞர்கள் அதிகம் வந்ததால் நீதிமன்ற பணிகள், நீதிபதியின் பணி ஆகியவை பாதிக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், வி.ஐ.பிகள் மற்றும் வி.வி.ஐ.பிகள் ஆஜராகும் வழக்குகளில், அவர்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்க கோரி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு ஜூலை 17ம் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன்.

அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மற்றும் புதுவை பார்கவுன்சில் சார்பாக வழக்கறிஞர் சந்திரசேகர் ஆஜராகி, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இதை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post விஜபிகள் கோர்ட்டுக்கு வரும்போது எத்தனை வழக்கறிஞர்கள் வரலாம் என்ற விதியை வகுக்க கோரி பொதுநல வழக்கு: தமிழ்நாடு பார்கவுன்சில் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Bar Council ,BJP ,Chennai ,DMK ,president ,Annamalai ,
× RELATED தேங்கிய மழை நீரை உடனுக்குடன் அகற்றிய...