×

ஐகோர்ட் தடை உத்தரவை போலியாக தயாரித்து மோசடி எஸ்.பி.தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை: டிஜிபிக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் ஒரு வீட்டை காலி செய்வது தொடர்பான வழக்கில் மேல் விசாரணை நடத்தக்கோரி ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் மற்றும் அவரது மனைவி தங்கமணி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ஆஜராகி, மனுதாரர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்களையும் இந்த வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மோசடி வழக்கில் அமல்ராஜ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அமல்ராஜ் ஏற்கனவே இதேபோல் பல குற்றங்களை செய்துள்ளார். இந்த நிலையில் அவரை போலீசார் ஏன் கைது செய்யவில்லை. அவரிடம் உரிய விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும். வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பாதுகாக்க சிலரின் அறிவுறுத்தலின்படி முக்கிய குற்றவாளியே வழக்கில் சேர்க்கவில்லை.
சண்முகம் தனக்கு தெரிந்த தங்கபாண்டியன் என்ற வழக்கறிஞர் இதுபோன்ற போலி தடை உத்தரவுகளை தருவதாக முருகானந்தத்திடம் போனில் பேசியுள்ளார். இந்த பேச்சு தானாக முருகானந்தத்தின் போனில் பதிந்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் பெயரில் உயர் நீதிமன்ற பதிவாளரின் கையெழுத்துடன் ஒரு போலியான தடை உத்தரவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது தெரியாது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுவது துரதிஷ்டமானது, அந்த உத்தரவு எந்த இடத்தில் டைப் செய்யப்பட்டது. விஷயம் தெரியாமல் டைப் செய்யப்பட வாய்ப்பில்லை. அது ஒரு கம்யூட்டர் சென்டர். இதிலிருந்தே பெரிய மோசடி நடந்துள்ளது தெரிகிறது. இந்த வழக்கில் பெரிய தவறுகளை செய்ததே விசாரணை அதிகாரிகள்தான். எனவே, இது குறித்து தமிழ்நாடு டிஜிபி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் போலி தடை உத்தரவை தயாரித்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

அவர்களுக்கு உடந்தையாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விசாரணை அதிகாரிகளிடம் துறைரீதியான விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே, இந்த மோசடி குறித்து விசாரிக்க எஸ்.பி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை டிஜிபி அமைக்க வேண்டும். இந்த குழு விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குமாரப்பாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் ஒரிஜினல் வழக்கு ஆவணங்கள் டிஜிபியிடம் சீலிட்ட கவரில் தரப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10ம் ேததிக்கு தள்ளிவைத்தனர். அப்போது, முருகானந்தம், தங்கமணி, சண்முகம ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post ஐகோர்ட் தடை உத்தரவை போலியாக தயாரித்து மோசடி எஸ்.பி.தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை: டிஜிபிக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCord ,DGB ,Chennai ,iCourt ,Erode district, Kumarapalayam ,Erode district ,Dinakaran ,
× RELATED நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய...