×
Saravana Stores

தி.மலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது திருண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு மலையே மகேசனாக விளங்கும் அண்ணாமலையை கிரிவலம் சென்று வருகின்றனர். மேலும் இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி, உத்ராயண புண்யகால பிரம்மோற்சவம், தட்சிணாயன புண்யகால பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம், திருவூடல் திருவிழா, ஆனி திருமஞ்சனம், கார்த்திகை தீபத்திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் மிகவும் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத்திருவிழா. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை மற்றும் இரவில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். 10ம்நாள் அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலையில் கோயிலின் பின்புறம் 2668அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்த மகா தீபத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்தாண்டு வரும் நவம்பர் மாதம் 14ம்தேதி தொடங்கி 30ம்தேதி வரை நடைபெற உள்ளது.

14ம்தேதி காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவமும், 17ம் தேதி ெகாடியேற்றமும், 23ம் தேதி மகா தேரோட்டமும், 26ம் தேதி மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகளுக்கு பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை, சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் துலா லக்கனத்தில் பந்தக்கல் முகூர்த்தம் நடந்தது. முன்னதாக சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலிற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து பந்தக்கால் மேளதாளம் முழங்க கொண்டுசெல்லப்பட்டு ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பத்கர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பந்தக்கால் நடப்பட்டதால் மகா தீப விழாவிற்கான பூர்வாங்க பணிகளான விழா பத்திரிகை அச்சடித்தால், பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வரும் வாகனங்களை பழுது பார்த்தல், பஞ்ச மூர்த்திகளின் ேதர் பழுது பார்த்தல், கோயில் வளாகம் தூய்மைபடுத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது போன்ற பணிகள் தொடங்கும்.

The post தி.மலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் appeared first on Dinakaran.

Tags : Dt. Pandakal ,Muhurat ,Anamalayar Temple ,Tiruvandamalai ,Pandakkal Muhurat ,Annamalayar temple ,Karthika Dipadiruviva ,Bandakal Muhurat ,Tipa Festival ,
× RELATED ஒட்டுமொத்த தூய்மைப் பணியால்...