
திருவனந்தபுரம்: 41 நாள் விரதம் இருந்து, கோயிலில் இருமுடி கட்டி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆங்கிலிக்கன் சபை பாதிரியார் சபரிமலையில் தரிசனம் செய்தார். திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகே உள்ள உச்சக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (50). ஆங்கிலிக்கன் சபை பாதிரியார் ஆவார். தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் 41 நாள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க தீர்மானித்தார். அதன்படி திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் மாலை அணிந்து கடந்த மாதம் முதல் விரதத்தை தொடங்கினார். தினமும் காலையிலும், மாலையிலும் குளித்து கோயிலில் தரிசனம் செய்தார்.
இந்து மதத்தை ஆழ்ந்து தெரிந்து கொள்வது மட்டும் தான் தனது நோக்கம் என்றும், மதம் மாறும் எண்ணம் இல்லை என்றும் பாதிரியார் மனோஜ் கூறினார். இதற்கிடையே பாதிரியார் மனோஜ் மீது ஆங்கிலிக்கன் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி சர்ச்சில் திருப்பலி உள்பட சடங்குகள் நடத்த அவருக்கு தடை விதித்துள்ளது. இது தவிர அவருக்கு வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டையும் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனாலும் சபரிமலை செல்லும் முடிவில் இருந்து தான் பின்வாங்கப் போவதில்லை என்று பாதிரியார் மனோஜ் கூறினார். இந்தநிலையில் 41 நாள் விரதம் இருந்த பாதிரியார் மனோஜ் நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டார்.
முன்னதாக திருவனந்தபுரம் திருமலையில் உள்ள மகாதேவர் கோயிலில் இருமுடி கட்டினார். அவருடன் மேலும் 5 பேரும் இருமுடி கட்டி அங்கிருந்து சபரிமலை புறப்பட்டனர். வழியில் சிவகிரி, பந்தளம், எருமேலியில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் சன்னிதானத்தை அடைந்தார். தொடர்ந்து 18ம்படி ஏறி நீண்ட நேரம் ஐயப்பனை தரிசனம் செய்தார். மாளிகைப்புரம் கோயிலிலும் தரிசனம் செய்த பின்னர் பாதிரியார் மனோஜ் ஊர் திரும்பினார். இது குறித்து அவர் கூறியது: சபரிமலை பயணம் மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. உள்ளே இருக்கும் தெய்வத்தை மனதாலும், உடலாலும் தரிசனம் செய்தது எனக்கு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பூரிப்பைத் தந்தது என்றார்.
The post 41 நாள் விரதமிருந்து இருமுடி கட்டுடன் கிறிஸ்தவ பாதிரியார் சபரிமலையில் தரிசனம் appeared first on Dinakaran.