×

நீட் தகுதித் தேர்வா? தரமற்ற தேர்வா?.. மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி

சென்னை: நீட் தகுதித் தேர்வா? தரமற்ற தேர்வா? என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கேள்வி அலுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; எளிய மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகளின் நலன்களுக்கும், கனவுகளுக்கும் எதிரான NEET தேர்வுக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 20 மாணவ, மாணவிகளின் கனவுகள் கலைக்கப்பட்டு, அவர்களின் இன்னுயிர்கள் பறிபோயிருக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் பற்றிய NEET தேர்வு எதிர்ப்பு தீ என்பது கர்நாடகம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் பரவி வருகிறது.

தற்போது வெளிவந்திருக்கும் ஒரு செய்தி NEET தேர்வு குறித்த மாயைகளை தகர்த்தெறிந்துள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்ககான 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக இருந்தாலும் M.D. , M.S. படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருக்கிறது. நாடெங்கிலும் 1325 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

“ஏற்கெனவே பதிவு செய்துள்ள விண்ணப்பத்தாரர்கள் மீண்டும் பதிவுசெய்யத் தேவையில்லை என்றும், அவர்கள் தங்கள் விருப்பங்களைத் திருத்த அனுமதி அளிக்கப்படும் என்றும், அவர்கள் மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்துடன் தொடர்பு கொள்ளலாம்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கேலித்கூத்தாக இருப்பது மட்டுமின்றி, NEET தேர்வு எந்த நோக்கத்திற்கானது என்ற போலி பிம்பங்களை உடைத்தெறியும் விஷயமாகவும் உள்ளது. இது தகுதி தேர்வல்ல… தரமற்ற தேர்வு என்பது அம்பலமாகியுள்ளது. தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவித்திருப்பதன் மூலம், NEET தேர்வு குறித்த பிம்பங்கள் சிதறியிருக்கின்றன.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு +2 தேர்வு மதிப்பெண்களை தகுதியாக ஏற்க முடியாது என்று கூறும் ஒன்றிய அரசு, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதி இருந்தால் மட்டும் போதும் மதிப்பெண்கள் முக்கியமல்ல என தீர்மானித்திருப்பது திரைமறைவு தோல்விகளை காட்டுகிறது. எனவே ஒன்றிய பாஜக அரசு மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும் என்றும், வீண் பிடிவாதம் காட்டி, வளரும் தலைமுறையினரின் உயிர்களோடு விளையாட கூடாது என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post நீட் தகுதித் தேர்வா? தரமற்ற தேர்வா?.. மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி appeared first on Dinakaran.

Tags : Majak General Secretary ,Tamimun Ansari ,Chennai ,Dinakaran ,
× RELATED அரசுக்கு எதிராக நிர்வாக யுத்தத்தை...