குறித்தேன் மனத்தில் நின் கோலம்!
அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்
“என்குறை தீரநின் றேத்துகிறேன்; இனி யான்பிறக்கின்;
நின்குறையே அன்றி யார்குறை காண்இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை
மெல்லியலாய்
தன்குறை தீர, எம்கோன்சடை மேல்வைத்த
தாமரையே.
(எழுபத்து இரண்டாவது அந்தாதி)
“ஆதியாக”
எந்த எண்ணத்தை நிறைவேற்ற எந்த செயலை எப்படிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்ய தடையாய் இருப்பது என்ன? அந்த தடையை உடைப்பது எப்படி அந்த எண்ணத்தை அனுபவ சாத்தியப்படுத்துவது எப்படி என்று எல்லோரும் அவரவர்க்கு தெரிந்த வகையிலே முயன்று வருகிறோம். எல்லாவற்றையும் உபாசனை ஒன்றிலேயே செய்ய முடியும். அதுவும் உமையம்மையை உபாசிப்பதாலே செய்ய முடியும் என்றாலும், பெறுவதற்குரிய வரத்தில் சிறந்தது முக்தியே. அம்முக்தியைப் பெற கங்காதர மூர்த்தியாகிய ருத்ர கங்கையை வணங்குவதனால், பித்ரு தோசம் நீங்கி முக்தி பெறலாம், என்கிறார் பட்டர். இனி பாடலுக்குள் நுழைவோம்.
“அந்தாதி பொருட்சொல் வரிசை”
என்குறை தீர
நின்று
ஏத்துகின்றேன்
இனி யான்பிறக்கின்
நின் குறையே அன்றி
யார் குறை காண்
இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை
மெல்லியலாய்
தன்குறை தீர, எம்கோன்
சடைமேல் வைத்த தாமரையே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கதைத் இனி காண்போம்.
“என்குறை தீர’’
அபிராமி பட்டர் இறைவியை எதற்காக வழிபடுகிறேன் என்பதை இச்சொல்லின் மூலம் விளக்கமளிக்கிறார். அவரது குறையை தீர்ப்பதற்கு அபிராமியை வழிபடுகிறேன் என்கிறார். அவரது குறை என்ன? என்பதை அவரே இதற்கு அடுத்த சொல்லில் குறிப்பிடுகின்றார். அபிராமிபட்டர் தன்னை இங்கே குறிப்பிட்டாலும், அவருக்கு மட்டுமின்றி அவர் பக்கத்தில் உள்ள அனைத்து உமையம்மையை வணங்கும் அடியார்களுக்குமே என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மேலும், “என்குறை தீர’’ என்ற வார்த்தையால் தன் குறைகளை தீர்க்க மக்கள் வேலைகளைச் செய்வது, பொருள் ஈட்டுவது என்று புறச்செயல்கள் பலவற்றை செய்து தெய்வீக நம்பிக்கை இல்லாமலேயே தன் குறைகளைத் தீர்த்துக்கொள்ள முயல்வோர்கள் இருக்கிறார்கள். பிற தெய்வத்தை வணங்கி தன் குறையைத் தீர்த்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள், என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை ‘மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்’(67), ‘பலி கவர் தெய்வங்கள் பார் சென்று மிக்க அன்பு பூணேன்’(64), என்பதனால் நன்கு உணரலாம்.
‘கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாதன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் பரசமயம் விரும்பேன்’ (23) என்ற உமையம்மையை முழுமுதற் கடவுளாகவும், அவள் அருளையே வேண்டி நின்று தொழுவோர்களையும் நெறியில் வழுவாது நின்ற தன்னை ஒத்தவர்களையும் தன்னையும் ‘‘என்” என்ற வார்த்தையால் குறிப்பிட்டும். “குறை தீர’’ என்பதனால் உபாசனை நெறியையும், அதை பின்பற்றுபவரை குறிப்பிட்டவே “என்குறை தீர’’ என்கிறார்.
“நின்று’’
என்ற சொல்லை ஐந்து பொருள்களில் அபிராமி பட்டர் பயன்படுத்துகின்றார். சாத்திர நெறிகளைப் பின்பற்றி, அதன் வழியே செய்யும் பூசனை முதலிய வழிபாட்டு செயல்நெறியை குறிப்பிடுகின்றார். ‘பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே’ (6) என்பதனால் அறியலாம். மனதைஒருநிலைப்படுத்தி இறைவியின் மீது அன்பு கொண்டு செய்கின்ற பக்தி நெறியில் “நின்று’’ என்கிறார். ‘விரும்பிதொழும்’ (94) என்பதனால் அறியலாம். சாத்திரங்களை கற்று அதில் இருக்கும் பொருள்களை நன்கு உணர்ந்து அதில் சொன்ன வழியில் நம்பிக்கை கொண்டு. அது உணர்த்தும் ஒன்றே இறைவி என்ற ஞானத்தை அனுபவத்தால் அறிந்து ஞான நெறியில் நிற்பதையே “நின்று’’ என்று குறிப்பிடுகின்றார்.
‘ஒன்றே’ (30), ‘ஆனந்தமாய் என் அறிவாய்’ (11) என்பதனால் அறியலாம். குண்டலினி, ஆசன, யம, நியம ஆசன, ப்ராணாயம, தாரணா, த்யானா, சமாதி என்ற எட்டு விதமான உடல் மற்றும் மூச்சுப் பயிற்சியின் மூலமாக எண்ணங்களையும் மனதை மூச்சடக்கி திருவடிவில் செலுத்துவதையே,பூசனையாக கொண்டு யோக நெறியில் நிற்பதையே “நின்று’’ என்று குறிப்பிடுகிறார். இதை ‘நெஞ்சம் பயில’ (59) ‘குறித்தேன் மனத்தில் நின் கோலம்’ (76) என்பதனால் அறியலாம். ஆலயங்களுக்கு சென்று தரிசன விதிப்படி கோயில்களில் விளங்கும் திரு உருவத்திற்கு அபிஷேக அலங்காரம் முதலியவற்றை அர்ச்சகர்களை கொண்டு செய்வித்து வணங்கும் பூஜைநெறி நிற்பதையே “நின்று’’ என்கிறார்.
“ஏத்துகின்றேன்’’
ஐந்து நெறியினாலும் வழிபாடு செய்வதை “ஏத்துதல்” என்றும், அதைத்தான் செய்வதையே “ஏத்துகின்றேன்” என்று குறிப்பிடுகின்றார். ஒரு நெறியைப் பின்பற்றி உமையம்மையின் அருளைப் பெற்றுவிடலாம் என்று இருக்க சாத்திர நெறியால் சடங்குகளையும், பக்தியால் அன்பையும், ஞான நெறியால் துறவறமும், அப்பியாசத்தால் யோக நெறியையும், தரிசனத்தால் ஆலய நெறியையும் கூறுகிறார். அதற்குக்காரணம் மனிதர்கள் மனது சார்ந்து பல்வேறு வகைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
அதனாலேயே, அவர்களுக்கு தக்கவாறு ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யவே இத்தனை நெறிகளையும் விளக்கியுள்ளார். ஒருவர், ஒரே தெய்வத்தை அத்துணை நெறிகளாலும் வணங்குவது என்பது இறைவன் அருளால் அன்றி சாத்தியமில்லை. அபிராமி பட்டர், தான் நெறியில் நிற்பதோடு அல்லாமல் அடுத்தவரையும் அந்நெறியில் நிற்க செய்ய முயல்வதையே என்குறைதீர நின்று “ஏத்துகின்றேன்’’ என்கிறார்.
“இனி யான் பிறக்கின்’’
என்பதனால் உமையம்மையினிடத்து பிரார்த்தனை செய்வோர் மூன்று விதமான பயன்களைக் கருதிச் செய்கிறார்கள். அதில் `ப்ரேயஸ்’ என்பது உலகியல் நன்மைகளையும், ‘ஷ்ரேயஸ்’ என்பது ஆன்ம நன்மையையும், ‘தேஜஸ்’ என்பது அருள் நன்மையையும் குறிக்கும். அந்த வகையில் அபிராமி பட்டர் இம்மூன்று நன்மைகளையும் வேண்டுகிறார் என்றாலும், இப்பாடலில் ‘தேஜஸ்’ என்ற இறையருள் நன்மையை வேண்டுகிறார். இதை ‘தனம் தரும் கல்வி தரும்…. அபிராமி கடைக்கண்களே’ (69) என்பதனால் உலகியலில் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கேட்கிறார். இதோடு மட்டுமல்லாமல், ‘கலையாத கல்வி….. சகல செல்வங்களும் தரும்’ என்ற பதிகத்தினாலும் ப்ரேயஸ்சை நன்கு உணரலாம். ‘ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம்’ (7) என்பதனால் ஷ்ரேயஸ்சை உணரலாம்.
இப்பாடலில், தேஜஸ் என்ற இறைவனுடன் இரண்டறக் கலக்கும் முக்தியின்பத்தையேபிரார்த்திக்கிறார். இது அவ்வளது எளிதல்ல. இந்த இன்பமானது இறைவன் அருளி, தாம் பெறுவதற்கு மூன்று படிநிலைகள் உள்ளன என்கிறது சாக்த தந்திரம். முதலில், `ப்ரேயஸ்’ என்ற உலகியல் இன்பங்கள் அனைத்தையும் பெற்று அனுபவிக்க வேண்டும். அந்த அனுபவத்தால் உலகியல் இன்பத்தில் ஒரு சலிப்பு தோன்றும். அது தொடர்ந்து நீடிக்கும் போது, மனதில் பற்றற்ற தன்மை தோன்றும்.
அந்த பற்றற்ற தன்மை, ஆன்ம ஞானத்தைப் பெற அடிப்படையாகும். அதைத்தான் `சிரேயஸ்’ என்கிறோம். இந்த ஆத்ம ஞானம் தோன்றும் போது, ஆணவம் [அறியாமை], கன்மம் [பாவ புண்ணியக்கணக்கு], மாயை [உடலின் ஆயுள்] மாயேயம் [நமக்கு ஏற்படும் சுக, துக்க அனுபவ ஞானம்] த்ரோதாயி [எதை செய்தால் எல்லா துன்பங்களில் இருந்தும்விடுபடலாம் என்று நமக்கு தெரியாமலிருக்கும் பண்பு]. இந்த ஐந்தும், நீங்கினாலே அன்றி, `தேஜஸ்’ சிவஞானமானது தோன்றாது.
அது தோன்றினால், ஆணவம் முதலான ஐந்து மலமும் வலுவற்றுப் போகும். உலகியல் செல்வம் மிகுதியாக பெருகும். சிறப்பாக சிவஞானம் தோன்றினால், பூர்வஜென்ம ஞாபகம் வரும். பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தால், மரணத்தை பற்றிய பயம் போகும். மரணம் என்பது ஒரு உடலைவிட்டு ஆன்மா வெளியேறுவது. பிறவி என்பது ஒரு உடலுக்குள் ஆன்மா பிரவேசிப்பது. இந்த இரண்டையும் பற்றி அபிராமிபட்டர் தெளிவாகப் பேசுகிறார்.
‘மரணம் – பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே’ (51) என்று கூறியதிலிருந்து அறியலாம். மேலும், உடலை விட்டு ஆன்மாவானது சொர்க்கம், நரகம், பித்ருலோகம் போன்ற உலகிற்கு செல்லும். மேல் நோக்கி போகப்போக ஆனந்தத்தையும், கீழ்நோக்கி வரவர துன்பத்தையும் ஆன்மா அனுபவிக்கும். இதையே ‘பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்’ (79) என்பதனால் கீழ் நோக்கி வருவதையும், ‘வெண்பக டூரும் பதம் தருமே’ (91) என்பதனால் மேல் நோக்கி செல்வதையும் அறியலாம்.
இது இரண்டையும் அல்லாமல் ஞானத்தால் மோட்சத்தை இப்பாடலில் கேட்கிறார். இந்த இடத்திலேயே இறையருளை பெற்று பிறவியில் விடுபட்டு இறைவியின் திருவடியை அடைந்து எப்பொழுதும் சலிப்பின்றி, இன்புற்று, எப்பொழுதும் அழிவுற்று இருப்பது, சார்பின்றி சுதந்திரமாக இருப்பது பாவ புண்ணியத்திலிருந்து விடுபட்டிருப்பது, இத்தகைய உயர்ந்த முத்தி நிலையையே ஒரே வார்த்தையால் “இனி யான்பிறக்கின்’’ என்கிறார்.
“நின் குறையே அன்றி’’
“நின்’’ என்ற வார்த்தையால் உமையம்மையை குறிப்பிடுகிறார். “நின் குறையே’’ என்பதனால் மோட்சத்திற்கு அருள் செய்யாத பண்பினை உமையம்மையினிடத்து சூட்டிக்காட்டுகிறார். உமையம்மையை பார்த்தவர்கள் குறைவு, பார்த்தாலும் உமையம்மையிடத்து பேசியவர்கள் மிகக் குறைவு, பேசினாலும், மோட்சத்தை கேட்டவர்கள் குறைவு, அப்படி கொடுப்பது என்பது உமையம்மையின் முழு விருப்பமாகும். அவள் அன்றி வேறு யாரும், மோட்சத்தை கொடுக்கவும் முடியாது என்பதை நன்கு அறிந்த பட்டர், தடுமாற்றம் இல்லாமல் கேட்கிறார். அப்படி கேட்பது, எல்லாவற்றையும்விட குறைவு. இதை ‘விரும்பி தொழும் அடியார்….. மொழி தடுமாறி’ (94) என்பதனால் நன்கு அறியலாம்.
அபிராமிபட்டர் எல்லாவற்றையும்விட, ஒரு படி மேலே சென்று மோட்சம் தராதது உன் குற்றமே என்கிறார். இது எல்லாவற்றையும்விட உயர்ந்த இறை உணர்வு பெற்ற நிலையில் உள்ளவர்கள்தான் இவ்வாறு இறைவியிடத்து பேச முடியும். அப்படி இறை உணர்வு பெறுவதற்குநெடுநாளைய அப்யாசம் வேண்டும். உமையம்மையின் அருள் மிகுதியாக வேண்டும். அதை பெறுபவர் அபிராமிபட்டர் என்பதை இவ்வார்தையால் உறுதி செய்கிறார்.
உலகியலில் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் அன்பு பூண்டு பழகினாலும், குறைசொல்லும் போதும் அவர்களிடையேயான நட்புறவை தடுக்கும். மேலும், நாம் யாரிடம் பழகவில்லையோ அவர்களிடத்து நிறையை கூறுவோமே அன்றி, குறையை கூறமாட்டோம். நன்கு பழகியவர்களிடத்திலேதான் குறை கூறுவோம். உரிமை உள்ளவர்களிடத்தில்தான் நேருக்கு நேராய் கூறுவோம்.
பதவியில் உயர்ந்தோர்கள், வயதில் முதியவர்கள், நம் வாழ்வில் தேவைகளை முழுவதுமாய் பூர்த்தி செய்பவர்கள், இவர்களை பார்த்து நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று முன்னிலையில் கூறுவதில்லை. ஆனால், அபிராமி பட்டரோ உமையம்மையை கண்டு “நின் குறையே அன்றி’’ என்று கேட்பது அபிராமி பட்டருக்கு, அபிராமியிடத்து உள்ள உரிமையையும், அபிராமிக்கு அவர் மேல் உள்ள ஒப்பற்ற கருணையையும் அறிய முடிகிறது. ‘பாரில் உன்னை சந்திப்பவர்க்கு எளிதாம்’(14) என்பதையே “நின் குறையே அன்றி” என்கிறார்.
“யார் குறை காண்’’
உமையம்மையே மோட்சம் தரவில்லை என்றால், வேறு யார் மீதும் அதை சுமத்த முடியாது. ‘நின் துணைவரும்’ (89) என்று அபிராமியினுடைய பரிவார தேவதைகளையோ பிற தேவதைகளையோ சுட்டிக்காட்டி, அவருடைய அருளால் மோட்சம் கிடைக்கும் என்றால், அவர்களை வேண்டச்சொல்வது முறை. அப்படி யாரும் இல்லை என்பதை சூட்டவே “யார்குறை காண்’’ என்கிறார். இது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவியாம் அபிராமி என்பதை நமக்கு மறைமுகமாகஉணர்த்துகிறார்.
தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்
The post குறித்தேன் மனத்தில் நின் கோலம்! appeared first on Dinakaran.