
நீலகிரி : நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் கடந்த 40 நாட்களில் 10 புலிகள் பல்வேறு காரணங்களால் இறந்து இருப்பதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாதுகாப்பை பலப்படுத்தி புலிகளை காக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதகை அருகே உள்ள சீவூர் வனப்பகுதியில் நேற்று 3 புலிக்குட்டிகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பெண் புலிக்குட்டி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்ட வனத்தில் புலிகள் தொடர்ந்து இறந்து வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கடந்த 40 நாட்களில் 10 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன என்றார்.
இறந்த புலிக்குட்டிகளின் தாயை கண்டுபிடிக்க 10க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். தாய் புலியை அடையாளம் காண அப்பகுதியில் கிடைத்த புலியின் எச்சம், வேட்டையாடிய கடமானின் மாமிசங்கள் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் முடிவுகள் வந்த பிறகே தாய் புலி குறித்து தெரியவரும் என்றும் வெங்கடேஷ் கூறினார். இந்த நிலையில் புலிகள் இறப்பதை தடுக்க தமிழக அரசு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே தாய் புலியை கண்டுபிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
The post நீலகிரி வனத்தில் புலிகள் தொடர்ந்து இறப்பதற்கு காரணம் என்ன ? :தாய் புலியை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்!! appeared first on Dinakaran.