×

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி : இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் 75வது குடியரசு தின விழாவிற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டமைப்பில் உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களை குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்க ஒன்றிய அரசு ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிலும் இந்த 3 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமெரிக்க அதிபர் ஜோபிடனை குடியரசு தின விழாவிற்கு பிரதமர் மோடி அழைத்ததாக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்சிட்டி தெரிவித்துள்ளார். இதே போல ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களை மோடி அழைத்திருப்பார் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா ஜனவரி 26ல் அந்நாட்டு தேசிய தினத்தை கொண்டாட உள்ளது. ஜப்பானில் ஜனவரி இறுதியில் நாடாளுமன்றக்கூட்டம் தொடங்க உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஜனவரியில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டு கூட்டத்தில் பிடனும் கடைசியாக உரையாற்ற உள்ளதால் 3 தலைவர்களும் இந்தியா வருவார்களா என்பது ஐயமாக உள்ளது. இருப்பினும் ஜனவரி 26ல் குவாட் தலைவர்கள் இந்தியாவில் ஒன்று கூடினால், சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு அது ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,US President Jobiten ,Republic of India Day ,Delhi ,US President ,Jobiten ,
× RELATED கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார் : பிரதமர் மோடி