×

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்ய குவியும் மக்கள்

கோவை, செப். 21: கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகைக்கு 7.41 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டமானது பேரரறிஞர் அண்ணா பிறந்தநாளான கடந்த 15-ம் தேதி துவங்கப்பட்டது. இதையடுத்து, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபர்களுக்கு உரிமை தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு வந்தது. மேலும், நிராகரிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்களின் செல்போன் எண்களுக்கு கடந்த 19-ம் தேதி முதல் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக மேல் முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதரார்கள் தங்களின் விண்ணப்பம் குறித்த நிலையை அறிந்து கொள்ளவும், மேல்முறையீடு செய்யவும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இ-சேவை மூலமாக மேல் முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டிற்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இ-சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்ய பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். தவிர, நிராகரிக்கப்பட்ட காரணங்களை தெரிந்து கொள்ளவும் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இ-சேவை மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்ய குவியும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!