×

சென்னிமலையில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்: கைது செய்யக்கோரி எஸ்பியிடம் மனு

ஈரோடு, செப். 21: சென்னிமலையில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை பசுவபட்டி பிரிவு தாசன்காட்டு புதூரை சேர்ந்தவர் அர்ஜூனன் (62). ஓய்வுபெற்ற சத்துணவு ஆசிரியர். இவரது மனைவி ரத்தினம் என்ற எப்சிபா (57). இவர்களது மகள்கள் பியூலா (31), ஜெனிபர் (25), மகன் சாமுவேல் (34) ஆவர். இவர்கள் கடந்த 17ம் தேதி அர்ஜூனனுக்கு சொந்தமான முருங்கத்தொழுவு ஊராட்சி கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் உள்ள ஓட்டு வீட்டில் ஜெபம் செய்து வந்தனர்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி, அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத 30 பேர் அர்ஜூனனிடம் சென்று ஜெபம் செய்யக்கூடாது என தகராறு செய்தனர். இதனை தடுக்க வந்த அர்ஜூனனின் மனைவி ரத்தினம், மகள் பியூலா, மகன் சாமுவேல், மருமகள் ஜெனிபர் ஆகியோரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில், காயமடைந்த அர்ஜூனன், ரத்தினம், பியூலா ஆகிய மூவரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அர்ஜூனன் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிந்து சின்னச்சாமி அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், யாரையும் கைது செய்யவில்லை.

இந்நிலையில், கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமலும், தண்டிக்கப்படாமல் இருப்பது எங்களுக்கு மனவேதனையளிக்கிறது. எனவே, அவர்களை விரைவாக கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

The post சென்னிமலையில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்: கைது செய்யக்கோரி எஸ்பியிடம் மனு appeared first on Dinakaran.

Tags : SP ,Erode ,Erode SP ,Chennimalai ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை