×

கலைஞர் மகளிர் உரிமை தொகை; பயனாளிகள் கணக்கில் பிடித்தம் செய்யும் வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, செப். 21: தமிழக அரசு செயல்படுத்தியுள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகள் வங்கி கணக்கில், கடன் நிலுவை போன்ற வேறு காரணங்களுக்காக பிடித்தம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இதை மீறும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மையத் தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் மத்திய ரிசர்வ் வங்கிக்கு மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு சுமார் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 தேசிய வங்கிக் கணக்குகள் மூலம் செப்டம்பர் மாதத்தில் இருந்து வழங்குகிறது. வறுமை கோட்டுக்கு உட்பட்ட மகளிர் குடும்ப உதவிக்காக ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் வகையில் மிகப் பெரும் சமூக நலத்திட்டமாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் திட்டத்தின் பயன், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசால் டிஜிட்டல் முறையில் வங்கியில் செலுத்தப்பட்ட பணம், பழைய கடன் பாக்கி என்ற வகையில் வங்கிகளால் தன்னிச்சையாக பிடித்தம் செய்யப்படுகிறது.

தமிழக அரசால் சமூக நலத்திட்டங்கள் படி வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் மானிய தொகைகள் பயனாளிகளின் வங்கி கணக்கில் வைப்பீடு செய்யும் நேரத்தில் அதனை பிடித்தம் செய்யக் கூடாது என மத்திய ரிசர்வ் வங்கி விதிகளை வகுத்துள்ளது. அதனை மீறினால் வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஆனால் கணினி மூலம் தானாகவே, பயனாளிகள் கடன் கணக்கில் பிடித்தம் செய்யப்படுவதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் தமிழக அரசு திட்டத்தின் படி வங்கி கணக்கில் உரிமை தொகை பிடிபடாமல் இருக்க கணினியில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வங்கிகளுக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகள் உரிய மாற்றங்கள் செய்யாமல் சமூக நலத்திட்டத்தில் குளறுபடியை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு சமூகநல உதவித்தொகையில் ரிசர்வ் வங்கி விதிகளை மீறி தொகை பிடித்தம் செய்தால் பயனாளிகள் நுகர்வோர் நீதிமன்ற சட்டம் 35ன் படி மனு தாக்கல் செய்து நஷ்ட ஈடு பெறவும் நுகர்வோர் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மகளிர் சுய உதவி குழுக்கள், பாதிக்கப்பட்ட மகளிர் நல சங்கங்கள் தேசிய வங்கிகளால் பிடிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உதவித்தொகை ரூ.1000ஐ உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நுகர்வோர் மையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, வங்கிகளால் பிடிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை, உடனடியாக விடுவிக்க தேசிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உடனடியாக அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை; பயனாளிகள் கணக்கில் பிடித்தம் செய்யும் வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள்...