
தஞ்சாவூர், செப். 21: தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஒத்திகை பயிற்சி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தீவிபத்து காலங்களில் கட்டிடங்களில் சிக்கிகொண்டவர்களை காப்பாற்றுதல், ஏணி, கயிறு, நோயாளர் தூக்கி மூலமாக காப்பாற்றுதல் குறித்து தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர்கள், கமாண்டோ வீரர்கள் செய்து காட்டினர். தீயை கட்டுப்படுத்த சிறிய ரக தீயணைப்பு சாதனங்களை கையாளுவது பற்றி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அலுவலக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையில் நடத்தப்படும் தனிநபர் பயிற்சி திட்டமானது தீத்தடுப்பு மற்றும் பேரிடர் பயிற்சி முடித்த தொழில் வர்த்தக நிறுவனங்களின் பணியாளர்கள் 26 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வடகிழக்கு பருவமழை ஆயத்த நிலை குறித்து தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்ந்த உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) செந்தில்குமாரி, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மத்திய மண்டல துணை இயக்குநர் கல்யாணகுமார், மாவட்ட அலுவலர் குமார், உதவி மாவட்ட அலுவலர் கணேசன், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை ஒத்திகை appeared first on Dinakaran.