நாகப்பட்டினம், செப்.21: சோழர்காலத்தில் புகழ்பெற்ற துறைமுகமாக நாகப்பட்டினம் துறைமுகம் இருந்தது. இந்த துறைமுகத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து இருந்தது. அதேபோல் இந்த துறைமுகத்தில் இருந்து வெங்காயம், பாமாயில், துணிகள் என பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இவ்வாறு புகழ்பெற்ற துறைமுகம் காலபோக்கில் தனது பொழிவை இழந்தது. இதையடுத்து சோழர்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என நாகப்பட்டினம் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து நாகப்பட்டினம் துறைமுகம் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் நேற்று தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இப்பணியை தொடங்கி வைக்க அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் நேற்று வந்தனர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் தூர்வாரும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். பின்னர் துறைமுகம் அமையவுள்ள இடத்தின் வரைபடத்தை ஆய்வு செய்த பின்னர் சுங்கதுறைக்கு சொந்தமான படகில் ஏறி கப்பல் போக்குவரத்து தொடங்கிய பின்னர் கப்பல் செல்லும் பாதையை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து துறைமுகத்தில் நடந்து வரும் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை செயலர் பிரதீப்யாதவ், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் நடராஜன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன், அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை அறங்காவலர் மேகநாதன், கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி, தலைமை செயற்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) சந்திரசேகர், மாவட்ட ஊராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, டிஆர்ஓ பேபி, மாநில துறைமுக அலுவலர் அன்பரசன், நாகப்பட்டினம் துறைமுக அலுவலர் மானேக்ஷா, செயற்பொறியாளர் (குடிமை) ரவிபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நாகை துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கியது appeared first on Dinakaran.