×

பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் காக்களூர் ஏரியில் கரைப்பு

திருவள்ளூர், செப்.21: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 640 இடங்களில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்வதற்காக ஆயில் மில் பகுதிக்கு டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. திருவள்ளூர், திருப்பாச்சூர், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, எடப்பாளையம், ஈக்காடு, ஈக்காடு கண்டிகை, வெங்கத்தூர், மணவாளநகர் உள்பட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன. இந்த ஊர்வல நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் வினோத்கண்ணா தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, நகரச் செயலாளர் கந்தசாமி, பாமக நிர்வாகிகள் பாலயோகி, வெங்கடேசன், தினேஷ்குமார், பாஜக நிர்வாகிகள் ராஜ்குமார், கருணாகரன், ஆர்யா சீனிவாசன், சுகதேவ், சதீஷ்குமார், பாலாஜி, விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் சிறப்புப் பூஜையுடன் விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டுச் சென்றது. இந்த ஊர்வலம் ஜே.என்.சாலை, பேருந்து நிலையம்,  வைத்திய வீரராகவர் கோயில் தேரடி, காக்களூர் சாலை வழியாக காக்களூர் ஏரிக்கு மேள, தாளம் முழங்க பக்தர்கள் பக்திப் பாடல்களுடன் சென்றது.

இதனைத் தொடர்ந்து காக்களூர் ஏரியில் பெரிய அளவிலான பள்ளம் தோண்டி தண்ணீர் நிரப்பி தயாராக வைத்திருந்த குளத்திற்குள் ஒவ்வொரு சிலையாக கரைக்கப்பட்டது.
இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா.சிபாஸ் கல்யாண் தலைமையில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி, உதவி காவல் கண்காணிப்பாளர் அனுமந்தன், ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் மேற்பார்வையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் ஊர்வலமாக சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

The post பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் காக்களூர் ஏரியில் கரைப்பு appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Kakalore lake ,Thiruvallur ,Vinayagar Chaturthi festival ,Lord ,Tiruvallur ,
× RELATED கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் அளவீடு