×

செங்கல்பட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி 15 பயனாளிகள் தொழில் தொடங்க காசோலைகளை அமைச்சர் வழங்கினார்

செங்கல்பட்டு, செப். 21: செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 15 பயனாளிகள் தொழில் தொடங்க, ₹1.47 லட்சத்திற்கான காசோலைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். செங்கல்பட்டு கலெக்டர் கூட்டரங்கில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அதில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தர். இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் 240 கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர், முஸ்லீம் சமுதாயத்தை சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனால், 2022-2023ம் ஆண்டிற்கான முதல் பருவத்தின் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) நன்கொடை தொகை ₹9 லட்சத்து, 50 ஆயிரத்திற்கு இணையாக அரசிடமிருந்து இணை மானியம் தொகை ₹19 லட்சம் பெறப்பட்டுள்ளது. அவற்றை, முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் வங்கி கணக்கில் மொத்தம் ₹31 லட்சத்து, 63 ஆயிரத்து 652 உள்ள தொகையில் ₹28 லட்சத்து 50 ஆயிரத்தை மொத்தம் 298 பயனாளிகளுக்கு காசோலையாக வழங்கிட மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்படி உத்தரவின்படி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக முதற்கட்டமாக 15 பயனாளிகளுக்கு சிறு தொழில் துவங்குவதற்கு மொத்தம் ₹1.47 லட்சத்திற்கான காசோலையினை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்து பாலா, மகளிர் திட்ட இயக்குநர் மணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாகிதா பர்வின், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அரசு, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன், திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் இதயவர்மன், செங்கல்பட்டு நகர்மன்றத் தலைவர் தேன்மொழி நரேந்திரன், லத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி பாபு, நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் தண்டபாணி, மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் சண்முகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி 15 பயனாளிகள் தொழில் தொடங்க காசோலைகளை அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!