திருவனந்தபுரம்: கேரள அரசு லாட்டரி ஓணம் பம்பர் குலுக்கலில் முதல் பரிசு ₹25 கோடி கோவையை சேர்ந்தவருக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள அரசு லாட்டரியில் ஓணம், கிறிஸ்துமஸ் புத்தாண்டு உள்பட விசேஷ நாட்களில் பம்பர் குலுக்கல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் ஓணத்தை முன்னிட்டு முதல் முதலாக ₹25 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.
இந்தப் பரிசு திருவனந்தபுரத்தை சேர்ந்த அனூப் என்ற ஆட்டோ டிரைவருக்கு கிடைத்தது. இந்நிலையில் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் ஓணம் பம்பர் முதல் பரிசு ₹25 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களுக்கு முன் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஒரு டிக்கெட்டின் விலை ₹500ஆக இருந்தபோதிலும் விற்பனை கடந்த வருடத்தை விட அதிகரித்தது. மொத்தம் 85 லட்சம் டிக்கெடுகள் அச்சிடப்பட்டன. இதில் நேற்று மதியம் வரை சுமார் 76 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. கடந்த வருடத்தை விட இந்த வருடம் 9 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையானது.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு டிஇ 230662 என்ற எண்ணுள்ள டிக்கெட்டுக்கு கிடைத்தது. இந்த டிக்கெட் தமிழக, கேரள எல்லையில் உள்ள பாலக்காடு மாவட்டம் வாளையாரில் விற்பனையாகி இருந்தது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது தான் இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கலாம் என கருதப்பட்டது.சில மணி நேர பரபரப்புக்குப் பின் கோவை அன்னூரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் பரிசு டிக்கெட்டுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டார். இவர் வாளையாரில் உள்ள லாட்டரி கடையிலிருந்து 10 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு டிக்கெட்டுக்குத் தான் முதல் பரிசு ₹25 கோடி கிடைத்துள்ளது.
கையில் எவ்வளவு கிடைக்கும்?
முதல் பரிசு ₹25 கோடியாக இருந்தாலும் அதில் பாதித் தொகை தான் கைக்கு கிடைக்கும். பிடித்தம் எல்லாம் போக ₹12.88 கோடி மட்டுமே கையில் கிடைக்கும்.
The post கேரள அரசு லாட்டரி ஓணம் பம்பர்; கோவையை சேர்ந்தவருக்கு ₹25 கோடி பரிசு appeared first on Dinakaran.