
தமிழக மீனவர்கள் மீது மீண்டுமொரு முறை அராஜகமான தாக்குதல் நடவடிக்கையை கையாண்டுள்ளது இலங்கை கடற்படை. கடந்த 18ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 300 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். அன்று மாலை இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாகவும், இருப்பினும் இலங்கை கடற்படை அத்துமீறி வந்து துப்பாக்கியால் சுட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுவரை இலங்கை கடற்படையால் சுமார் 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான படகுகளும் சிறைபிடிக்கப்பட்டன. கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது, வலை உட்பட மீன்பிடி உபகரணங்களை வெட்டி கடலில் வீசுவது உள்ளிட்ட அராஜக சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், விசைப்படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், பாஜ ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் விடுவிக்கப்படுவது மட்டுமே நடக்கிறது. சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.
மேலும், இலங்கை அரசின் புதிய சட்டத்தின்படி, சிறைபிடிக்கப்படும் தமிழக படகுகள், அந்நாட்டு அரசுடைமையாக்கப்படுகின்றன. ஏற்கனவே இலங்கை அரசு சிறைபிடித்து வைத்திருக்கும் தமிழக மீனவர்களின் பல கோடி மதிப்புள்ள நூற்றுக்கணக்கான படகுகள் உப்புக்காற்று, இயற்கை பேரிடர்களால் பயன்படுத்த முடியாத நிலைக்கு சேதமடைந்து பரிதாப நிலையில் காட்சியளிக்கின்றன. தற்போது அரசுடைமையாக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்று விடுகிறது இலங்கை அரசு. இதனால் பல லட்சம் ரூபாய் கடன் பெற்று, விசைப்படகுகளை வாங்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதனால் மீனவர்களில் பலர் மாற்றுத்தொழிலை நாடி செல்கின்றனர். இதே நிலை நீடித்தால் தமிழக மீன்பிடி தொழிலே அழியும் அபாய நிலைக்கு தள்ளப்படும். கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுகின்றனர். நடப்பாண்டில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைதாகியுள்ளனர். கைது நடவடிக்கை மற்றும் இலங்கையின் அத்துமீறல் போக்கை தடுத்து நிறுத்த கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைதாகும்போதெல்லாம் இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்.
ஒன்றிய அரசுக்கு ஆண்டுதோறும் மீன்பிடி தொழில், பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை பெற்று தருகிறது. இதில், சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை தமிழக மீனவர்களே பெற்றுத் தருகின்றனர். ஆனாலும், தமிழக மீனவர்கள் நலனில் ஒன்றிய அரசு ஒருபோதும் அக்கறை காட்டுவதில்லை. பெயரளவில் மட்டுமே இதுவரை பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இனியாவது, இலங்கை அரசுடன், ஒன்றிய அரசு முறையான பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட வேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை மீட்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும்.
The post துயரம் தீருமா? appeared first on Dinakaran.