
புதுடெல்லி: மக்களவையில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா குறித்த எதிர்கட்சிகள் விவாதத்தை காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி நேற்று தொடங்கி வைத்து பேசி யதாவது:
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. இந்த மசோதா நிறைவேறியதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான். இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதில் தாமதம் செய்வது இந்திய பெண்களுக்கு இழைக்கப்படும் மோசமான அநீதியாகும். இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கையாகும்.
அதே நேரத்தில் நிறைவேற்றுவதில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட இன பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், நன்றி தெரிவிப்பதற்கும் இது பொருத்தமான தருணமாகும் உள்ளாட்சி அமைப்புக்களில் பெண்கள் பங்கேற்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்தவர் எனது கணவர் ராஜிவ்காந்தி. ஆனால் அது 7 வாக்குகள் வித்தியாசத்தில் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டது.
பின்னர் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அதனை நிறைவேற்றியது. இதன் விளைவாக நாடு முழுவதும் 15லட்சம் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்கள் இருக்கின்றனர். ராஜிவ் காந்தியின் கனவில் பாதி தான் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலமாக அது முழுமையாக நிறைவேறும்” என்றார்.
The post பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்க ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.