×

இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பு; கனடாவில் இருக்கும் இந்தியர்கள் கவனமாக இருங்கள்: வெளியுறவு துறை எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், அங்குள்ள இந்தியர்கள், இந்திய மாணவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்படுமாறு வெளியுறவு துறை எச்சரித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை, தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய அரசின் ஏஜென்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரியை அந்நாடு வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் இருக்கும் கனடா மூத்த தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற ஒன்றிய அரசும் உத்தரவிட்டுள்ளது. ஹர்தீப் சிங் கொலை விவகாரத்தால் இந்தியா – கனடா இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்துள்ளது.

அங்குள்ள இந்தியர்களும், கனடாவிற்கு செல்ல நினைப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சமீபத்திய அச்சுறுத்தல்கள் குறிப்பாக இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்க்கும் இந்திய சமூகத்தின் பிரிவுகளை குறிவைத்துள்ளன. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த கனடாவில் உள்ள பகுதிகளுக்கும், சம்பவங்கள் நிகழ்வதற்கு சாத்தியமான இடங்களுக்கும் பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கனடாவில் பாதுகாப்பு சூழல் மோசமடைந்து வருவதால் குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவ உறவை பாதிக்காது
இந்தியா-கனடா இடையே சமீபத்தில் ஏற்பட்ட தூதரக மோதல் விவகாரமானது இருதரப்பு ராணுவ ஈடுபாட்டை பாதிக்காது என இந்திய ராணுவ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். கூடுதல் இயக்குனர் ஜெனரல் மேஜர் அபினயா ராய் கூறுகையில், ‘‘வருகிற 26 மற்றும் 27ம் தேதி இந்திய ராணுவம் சார்பில் இந்தோ-பசிபிக் ராணுவ தலைவர்கள் மாநாடு டெல்லியில் நடைபெறுகின்றது. இதில் கனடா ராணுவ தலைவர் பங்கேற்கிறார்” என்றார்.

The post இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பு; கனடாவில் இருக்கும் இந்தியர்கள் கவனமாக இருங்கள்: வெளியுறவு துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,State Department ,Delhi ,Ministry of External Affairs ,Indians ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு