
சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012ம் ஆண்டே வாபஸ் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, 2011ல் அளித்த புகாரை 2012ல் விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில், 2023ல் புதிதாக புகார் அளித்து அதுவும் ஒரு மாதத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு நகல் தரப்படவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, மனு நகலை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, 2011 மற்றும் 2023ல் விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெற்றவிவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும். 2011ல் அளித்த புகார் வாபஸ் பெறப்பட்ட நிலையில் வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்றும் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் சீமான் மீது வழக்கு நிலுவையில் இருப்பது ஏன்? காவல்துறை விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.