×

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டு வழங்குவதற்காக துப்புரவு ஊழியர்களை பயன்படுத்தும் அவலம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிப்பதால் துப்புரவு ஊழியர்களை கொண்டு ஓ.பி. சீட்டு வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு மதுராந்தகம் மற்றும் முதுகரை, தோட்ட நாவல், பெரும்பாக்கம், கூடலூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் புற நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களுக்கு தினமும் காலை 7.30 மணிக்கு மருந்துவ ஓ.பி. சீட் வழங்க வரிசையில் உட்காரவைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தினமும் காலை 9 மணிக்கு மேல்தான் ஓ.பி.சீட்டு வழங்கப்படுகிறது. இதன்காரணமாக சிகிச்சைக்காக வருகின்ற புற நோயாளிகள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.

மேலும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக துப்புரவு பணியாளர்களை வைத்து ஓ.பி. சீட்டை வழங்கி வருகின்றனர். இதனால் துப்புரவு பணி பாதிக்கப்படுகிறது. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் சர்க்கரை நோய் பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ‘‘சர்க்கரை நோயாளிகள் இரண்டு முறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அப்படியிருக்கும்பட்சத்தில் சிகிச்சை பெறுவதற்கு மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலைமை உள்ளதால் அவதிப்படுகிறோம். இதுபோல் மற்ற நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்’ என்று நோயாளிகள் கூறுகின்றனர்.

The post மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டு வழங்குவதற்காக துப்புரவு ஊழியர்களை பயன்படுத்தும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Madurandakam Government Hospital ,Madurandakam ,Chengalputtu District ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய...