×

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழப்பு: முதுமலை காப்பக கள இயக்குனர் பேட்டி

நீலகிரி: நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்துள்ளதாக முதுமலை காப்பக கள இயக்குனர் தெரிவித்துள்ளார். நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட சின்ன குன்னூர் பகுதியில் புலிக்குட்டிகள் நடமாட்டம் தென்படுவதாக பொதுமக்கள் கடந்த 14ம் தேதி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு தற்காலிக முகாம் அமைத்து புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வனக்கோட்டம் சந்திக்கும் எல்லைப்பகுதியில் கடந்த 17ம் தேதி பிறந்து இரு மாதங்களே ஆன ஆண் புலிக்குட்டியின் உடலை கண்டறிந்தனர். பிரேத பரிசோதனைக்குபின் சடலம் எரியூட்டப்பட்டது. பின்னர் 4 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மற்ற புலிக்குட்டிகள் மற்றும் தாய்ப்புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே நேற்று காலை மேலும் 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டனர். சோர்வான நிலையில் புலிக்குட்டி ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. அந்த குட்டியும் நேற்று மாலை உயிரிழந்தது. தாய் புலியை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், சீகூர் வனப்பகுதிகளில் தாய் புலி விட்டுச்சென்றதால் 6 குட்டிகள் உயிரிழந்ததாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார். நடுவட்டம், கார்குடி உள்ளிட்ட பகுதிகளில் 2 புலிகள் மற்ற புலிகளுடன் சண்டையிட்டதால் உயிரிழந்ததாக அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

The post நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழப்பு: முதுமலை காப்பக கள இயக்குனர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nilgiris forest ,Mudumalai Reserve Field ,Nilgiris ,Field Director ,Mudumalai Reserve ,Nilgiris… ,Dinakaran ,
× RELATED நீலகிரி வனக்கோட்டத்தில் வன...