×

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்.9ம் தேதி தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 9-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்பாவு, நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும். பாஜக அரசு 2014-ம் ஆண்டே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயற்சி எடுத்திருந்தால் தற்போது அமலுக்கு வந்திருக்கும் என்று சபாநாயகர் கூறினார்.

“தேர்தலை மனதில் வைத்தே மகளிர் இடஒதுக்கீடு மசோதா”:

மகளிர் இட ஒதுக்கீடு எப்போது அமலுக்கு வரும் என்பது மிகப்பெரிய கேள்வி என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தற்போது தேர்தலை மனதில் வைத்தே பாஜக அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருகிறது. 2014ம் ஆண்டிலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஏன் தாக்கல் செய்யவில்லை? எனவும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் தமிழ்நாட்டில் 1.06 கோடி பேர் பயன்பெறுகின்றனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தால் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியை உணர்ந்து மகளிர் வாக்குகளை குறிவைத்து மசோதா கொண்டு வருவதாக விமர்சனம் செய்தார். சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவதுதான் மரபு, ஆனால் நேற்று ஜனாதிபதி அழைக்கப்படவில்லை. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கும் ஜனாதிபதி அழைக்கப்படவில்லை என சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். அக்.9-ம் தேதி 2023-2024-க்கான கூடுதல் செலவின மானியக் கோரிக்கைகள் சமர்பிக்கப்பட உள்ளன என்றும் அப்பாவு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை: அப்பாவு பதில்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் மாற்றமில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுவிட்டது; அதே நிலை தொடரும். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை மாற்றம் தொடர்பாக இப்போது ஏதும் கோரிக்கை இல்லை. ஒபிஎஸ்க்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி வருகிறது எனவும் அப்பாவு தெரிவித்தார்.

The post தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்.9ம் தேதி தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Speaker ,Appa ,Chennai ,Appavu ,Tamil Nadu Legislative Assembly ,Parliament ,
× RELATED புயல் பாதிப்பை சீர் செய்திட நிவாரண...