×

பர்கர் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம்.. சிறுவனுக்கு தீவிர சிகிச்சை: நாமக்கல்லில் மீண்டும் பரபரப்பு!!

நாமக்கல் : நாமக்கல் – சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடையில் பர்கர் சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதே கடையில் பர்கர் சாப்பிட்ட மேலும் 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் பூங்கா நகரை சேர்ந்த சஞ்சய் (18 )உள்பட 8 பேர் பர்கர் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினர். சஞ்சய் என்ற சிறுவனுக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பர்கர் கடையில் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைகளில் இருந்த தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தின் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். அதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 19 பேரும் உடல் உபாதைகளுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட அந்த உணவகத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பர்கர் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம்.. சிறுவனுக்கு தீவிர சிகிச்சை: நாமக்கல்லில் மீண்டும் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Mr. Burger ,Namakkal - Salem ,
× RELATED சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்