×

பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவு.. கூட்டணி குறித்து சர்ச்சை கருத்துக்களை கூற வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்!!

சென்னை : கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று மாவட்டச் செயலாளர்கள் மூலம் நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக, பாஜ கூட்டணியில் இருந்து வந்தன.தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை பதவியேற்றதில் இருந்தே அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம். பாஜ தனித்து போட்டியிட வேண்டும் என்ற மனநிலையில் உள்ளார். கொங்கு மண்டலத்தில் நான்தான் பெரிய ஆள் என்று நினைத்து கொண்டு எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர்களை தரக்குறைவாக பேசி மோதல் போக்கை அண்ணாமலை கடைபிடித்து வருகிறார்.

இதை அதிமுக தொண்டர்கள் முதல் 2ம் கட்ட தலைவர்கள் வரை ரசிக்கவில்லை. சமீப காலமாக ஜெயலலிதா தொடங்கி அண்ணா, பெரியார் குறித்து அண்ணாமலை சர்ச்சை பேச்சை தொடர்ந்து வருகிறார். இதற்கு அதிமுக மாஜி அமைச்சர்கள் காட்டமான பதிலடி கொடுத்தனர்.தொடர்ந்து, பாஜவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு அதிமுக நிர்வாகிகளும் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை வெளியிட்டுள்ள உத்தரவில், “பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளின் விமர்சனங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கனவே கூறிவிட்ட நிலையில் கூட்டணி தொடர்பாக யாரும் பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம். போஸ்டர் ஓட்டுவது, சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பதையும் தவிர்க்க வேண்டும்,” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த உத்தரவு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மூலம் அதிமுகவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

The post பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவு.. கூட்டணி குறித்து சர்ச்சை கருத்துக்களை கூற வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Bajaka ,Chief of the Chief ,Dinakaran ,
× RELATED தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது...