×

ஊட்டி நகரில் ஓட்டல்களில் பரபரப்பு: உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனையில் 32 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

 

ஊட்டி, செப்.20: ஊட்டி நகரில் ஓட்டல்களில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறையினர் 32 கிலோ பழைய கெட்டுபோன இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 5 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி தனது குடும்பத்தினருடன் கடந்த 2 நாளுக்கு முன்பு நாமக்கலில் ஒரு தனியார் ஓட்டலில் சவர்மா மற்றும் துரித உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். இதில் அந்த மாணவிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நடத்தினர். ஊட்டி கமர்சியல் சாலை, பாரதியார் வணிக வளாகத்தில் உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 32 கிலோ பழைய கெட்டுபோன கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்து அவற்றில் பினாயில் ஊற்றி அழித்தனர். இதுகுறித்து உரிய விளக்கம் கேட்டு 5 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மெஸ்கள் போன்றவை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும். குறிப்பாக அசைவ ஓட்டல்களில் பழைய கெட்டுபோன இறைச்சிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கெட்டுபோன இறைச்சிகளை பயன்படுத்து குறித்து புகார்கள் வந்தாலோ அல்லது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

The post ஊட்டி நகரில் ஓட்டல்களில் பரபரப்பு: உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனையில் 32 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Food safety department ,Food security department ,
× RELATED தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற...