×

சந்ததியினருக்கும் கிடைக்கும் வகையில் நாட்டு காய்கறிகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்

 

திருத்துறைப்பூண்டி, செப். 20: சந்ததியினருக்கும் கிடைக்கும் வகையில், நாட்டு காய்கறிகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாரம்பரிய நாட்டு காய்கறிகளை பயன்படுத்தவும், பாதுகாப்பதும் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சேகல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியை பூங்குழலி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மாதவன், கார்த்திகேயன், ஆசிரியை சுகந்தி முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களிடையே பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் மற்றும் இயற்கை விவசாயி கரிகாலன் பேசுகையில், தினமும் உண்ணுகின்ற உணவில் காய்கறிகளின் பங்கு மிகவும் அதிகமானது. காய்கறிகளில் இருந்து கிடைக்க பெறும் ஊட்டச்சத்துக்களும் நமது உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. காய்கறிகளையும் நாமே விளைவித்து நமது தேவைக்கு நாம் உபயோகப்படுத்த வேண்டும். இதன் மூலம் நாட்டு காய்கறிகள் அழிந்து விடாமல் நமது சந்ததியினருக்கும் கிடைக்கப்பெறும்.

தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ நாட்டு காய்கறிகளை பயிர் செய்து கொள்வதால் கலப்பின காய்கறிகளை நாம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. கீரை வகைகளில் தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலை கீரை, அகத்தி கீரை, முளைக்கீரை வகைகளை நாமே நேரடியாக பயிர் செய்து நமது தேவைக்கு போக மற்றவற்றை அடுத்தவர்களிடம் கொடுத்து அவர்களிடமிருந்து காய்கறிகளை பண்டமாற்று முறையில் பெற்றுக்கொள்ளலாம் என்றார். கீரை, அவரை, பீர்க்கன், மிளகாய், கத்திரிக்காய், கொத்தவரங்காய், முள்ளங்கி, தக்காளி , புடலை, பாகல் போன்ற நாட்டு காய்கறி விதைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆசிரியை கனிமொழி நன்றி கூறினார்.

The post சந்ததியினருக்கும் கிடைக்கும் வகையில் நாட்டு காய்கறிகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,
× RELATED மீன் வளர்ப்புக்கு அரசு காப்பீட்டு திட்டம் வேண்டும்