
- கலைஞர் பெண்கள் அதிகாரமளித்தல் ஆதரவு மையம்
- அரியலூர் மாவட்டம்
- அரியலூர்
- அரியலூர் மாவட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையம்
- தின மலர்
அரியலூர்,செப்.20: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சரால் கலைஞர் மகளிர் உரிமை திட்டமானது கடந்த 15ம்தேதி துவக்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவரது வங்கி கணக்கிலும் நேரடியாக ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் கோரும் போது அவர்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்கும் வகையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலங்கள் மற்றும் அனைத்து தாலுகா அலுவலங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தினை இன்றையதினம் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கைகளின் விவரம் குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கோரும் தகவல்களை வழங்கிட வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்யக் கோரும் விண்ணப்பதாரர்களை அவர்களது விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்ற 30 நாட்களுக்குள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் கட்டணமின்றி சம்மந்தப்பட்ட ஆர்டிஓவுக்கு மேல்முறையீடு செய்து தெரிவிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) இளங்கோவன், மாவட்ட ஆட்சியரக மேலாளர் (பொது) குமரையா, தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட உதவி மையம் appeared first on Dinakaran.