
சென்னை, செப்.20: துபாயில் இருந்து சென்னைக்கு ₹2.2 கோடி மதிப்புடைய 4 கிலோ தங்கம் கடத்தி வந்த ஆசாமியை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விமான நிலைய ஊழியரையும் கைது செய்தனர். துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள், ட்ரான்சிட் பயணிகளாக மற்றொரு விமானத்தில் செல்ல இருக்கும் பயணிகளுக்கு அங்கு தனியாக கழிவறை உள்ளது. அந்த கழிவறைக்குள், சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியர் சஞ்சய் என்பவர் சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தார். அதோடு அவர் சர்வதேச விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்லவும் முயன்றார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் பிரசாந்த் குமாருக்கு, சஞ்சய் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை நிறுத்தி சோதனையிட்டார். அதில் அவருடைய உள்ளாடைகளுக்குள் 3 பார்சல் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை வெளியில் எடுத்து பிரித்து பார்த்தபோது, தங்க பசை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் பிரசாந்த் குமார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து நடத்திய விசாரணையில், விமான நிலைய ஊழியர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலில் சுமார் 4 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ₹2.2 கோடி என தெரியவந்தது. இதையடுத்து மத்திய தொழில பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்த தங்க பசையையும், ஊழியர் சஞ்சய்யையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சுங்க அதிகாரிகள் சஞ்சய்யை கைது செய்து, மேலும் விசாரணை நடத்திய போது, துபாயில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணம் செய்த இலங்கையை சேர்ந்த முகமது நிஸ்தார் அபுசாலி என்ற பயணி, இந்த தங்கத்தை கடத்தி வந்துள்ளார். அவர் சுங்கச் சோதனைக்கு செல்லும் முன்பு, குடியுரிமை சோதனை பகுதியில் உள்ள, கழிவறையில் மறைத்து வைத்து விட்டார். அவருடைய கூட்டாளியான சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியர் சஞ்சய், இந்த தங்க பார்சலை கழிவறையிலிருந்து எடுத்து, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் கொண்டு செல்ல முயன்றபோது பிடிபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மற்றொரு விமானத்தில் இலங்கை செல்ல இருந்த, கடத்தல் பயணி முகமது நிஸ்தார் அபுசாலியையும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மடக்கிபிடித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சுங்க அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தங்கம் கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர் மற்றும் இலங்கை பயணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post துபாயில் இருந்து சென்னைக்கு 4 கிலோ தங்கம் கடத்திய இலங்கை ஆசாமி கைது: உடந்தையான விமான நிலைய ஊழியரும் சிக்கினார் appeared first on Dinakaran.